அரச நிறுவனங்களில் தமிழ்மொழி அமுலாக்கம்

சகல அரசாங்க நிறுவனங்களிலும் தமிழ் மொழியை முழுமையாக அமுல் படுத்துவதற்காக, முதற்கட்டமாக இம் மாதம் சகல அமைச்சு செயலாளர்களையும் அறிவூட்டவுள்ளதாக அரசியல் விவகார தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளர் திருமதி எம். எஸ். விக்ரமசிங்க தெரிவித்தார்.

அரச சரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அமைச்சின் செயலாளர்கள், மாகாண சபைகளின் தலைமைச் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், உள்ளூராட்சி நிறுவனத் தலைவர்கள், மாகாண அரசாங்க

சேவை ஆணைக்குழுச் செயலாளர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதன் படி சகல அரசாங்க நிறுவனங்களிலும் அரச கரும மொழியை நடைமுறைப்படுத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தங்களுக்குக் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழ்மொழி அமுலாக்கல் தொடர்பில் அறிவுறுத்தல் வழங்குமாறும் அமைச்சின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் திருமதி விக்ரமசிங்க கூறினார்.

அரச கரும மொழியை அமுல்படுத்தும் பொறுப்பு தற்பொழுது அரசியல் விவகார தேசிய நல்லிணக்க அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனாதிபதியின் வழிகாட்டலுடன் தமிழ் மொழியை சகல அரச நிறுவனங்களிலும் அமுல்படுத்த காத்திரமான பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் தமிழ் மொழியை அமுல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளை அடையாளங் கண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச நிறுவன தலைவர்கள் கோரப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் குறித்த நிறுவனத்தில் தமிழ் மொழியை அமுலாக்க தேவையான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப் படும் எனவும் அவர் கூறினார்.

அரச கருமமொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்தும் நோக்கத்துடன் அரச ஊழியர்களுக்கு இரண்டாம் மொழியை கற்பிக்கும் நடவடிக்கையும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ள ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இரண்டாம் மொழி கற்பிக்கப்பட்டு வருவதோடு இரண்டாம் மொழியைக் கற்றவர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவு பதவி உயர்வு என்பனவும் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply