`லங்கா` பத்திரிகை வழமைப் போல் வெளியிட நீதிமன்றம் அனுமதி

இரு தினங்களுக்கு முன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் சீல் வைக்கப்பட்ட ஜே.வி.பி. ஆதரவு `லங்கா` பத்திரிகை அலுவலகத்தை திறந்து, வழமைப் போல் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக பத்திரிகையின் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செய்தியை வெளியிட்டதாக தெரிவித்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் நுகேகொட தெல்கந்தவில் அமைந்துள்ள லங்கா பத்தரிகைஅலுவலகம் கடந்த 30 ஆம் திகதி குற்றப்புலனாய்ப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை நடத்துவதற்காக ஒரு தரப்பு கருத்துக்களை மாத்திரம் செவிமடுத்த நீதிமன்றம் பத்திரிகை அலுவலகத்தை தற்காலிமாக சீல் வைக்க அனுமதி வழங்கியிருந்தது. நீதிமன்றம் இன்று நடைபெறும் நீதி விசாரணைகளில் இரண்டு இரு தரப்பு வாதங்களை முன்வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

இதனடிப்படையில் இன்று நடைபெற்ற விசாரணைகளில் வாதங்களை முன்வைத்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர், லங்கா பத்திரிகையின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த தமது திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் தொடர்ந்தும் அலுவலகத்தை சீல் வைக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். எனினும் லங்கா பத்திரிகை சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், பத்திரிகை வெளியீட்டுக்கு தடை விதிப்பது அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள மக்களின் தகவல் அறியும் உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மீறுவதாகும் என சுட்டிக்காட்டினர்.

இரு தரப்பு வாதங்களை செவிமடுத்த நீதவான் அரசாங்கத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செய்தி வெளியிடப்பட்டது என்பதை உறுதிப்படுத்தக் கூடிய சாட்சியங்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் அலுவலகத்தினால் முன்வைக்க தவறியுள்ளதாகவும் இதனால் பத்திரிகையை வெளியிட அனுமதிப்பதாகவும் உத்தரவிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply