இலங்கையில் போர்நிறுத்தம்: உரிய அழுத்தம் கொடுப்பதாக இந்தியப் பிரதமர் உறுதிமொழி

இலங்கையில் போர்நிறுத்தமொன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்பதற்கான அழுத்தத்தை இந்திய மத்திய அரசாங்கம் வழங்கும் எனத் தன்னைச் சந்தித்த தமிழக அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களிடம், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதிமொழி வழங்கியுள்ளார். 
 
இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்படவேண்டும், இந்தியாவின் நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்குச் சென்றடைவது உறுதிப்படுத்தப்படவேண்டும் போன்ற விடயங்கள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிப் பாராளுமன்றக் குழு உறுப்பினர்கள், நேற்று இந்தியப் பிரதமரைச் சந்தித்தனர்.

இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்படவேண்டும் என நாங்கள் தொடர்ச்சியாகக் கூறிவருவதை பிரதமரிடம் மீண்டும் வலியுறுத்திக் கூறினோம்” என திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான உரிய அழுத்தத்தை இந்தியா இலங்கைக்கு வழங்கும் என பிரதமர் தம்மிடம் உறுதிமொழி வழங்கியதாக அவர் கூறினார்.

அத்துடன், வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள் உரியமுறையில் சென்றடையவில்லையென்பதை பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவந்ததாகவும், இது தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மேலும் தெரிவித்தார்.

நேற்றையதினம் பிரதமரைச் சந்திக்கச் சென்றிருந்த குழுவில் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். அ.தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்றிருக்கவில்லை.

இதேவேளை, இலங்கை இராணுவத்திற்கு இந்திய மத்திய அரசாங்கம் ஆயுதங்களை வழங்குவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மறுத்துள்ளார்.

இந்தியா, இலங்கைக்கு உயிர்கொல்லி ஆயுதங்களை வழங்கவில்லையென்பதை இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி, இறுதியாக சென்னைக்கு வந்திருந்தபோது தெளிவுபடக் கூறியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது இவ்விதமிருக்க இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் எதிர்வரும் வியாழக்கிழமை தமிழக அனைத்துக் கட்சிக் குழு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திக்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply