சுதந்திரத்தை முழுமைப்படுத்துவோம்

இன்று சுதந்திரதினம். இலங்கை சுதந்திரம் பெற்று அறுபத்தொரு வருடங்கள் கழிந்துவிட்டன. எங்கள் சுதந்திரம் முழுமை பெற்றுவிட்டதென இப்போதும் கூற முடியாது.

அண்டை நாடான இந்தியாவைப் போலத் தீவிரமான சுத ந்திரப் போராட்டம் இலங்கையில் இடம்பெறவில்லை. பேச்சுவார்த்தைகளுக்கூடாகவே இலங்கை சுதந்திரம் பெற்றது. அதன் காரணமாக இருக்கலாம், நாங்கள் பெற்ற சுதந்திரம் முழுமையானதாக இருக்கவில்லை.

சுதந்திரத்துக்குப் பின்னரும் பிரித்தானிய மகாராணியின் பெயராலேயே இலங்கைப் பாராளுமன்றம் சட்டங்களை இயற்றியது. பிரித்தானியாவின் கடற்படை மற்றும் விமானப்படைத் தளங்கள் இலங்கையில் தொடர்ந்திருப்பதை அனுமதிக்கும் பாதுகாப்பு ஒப்பந்தம் இரு நாடுகளுக்குமிடையே கைச்சாத்திடப்பட்டது.

அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் சுதந்திரத்தை நோக்கிய முதலாவது முன்னேற்றம் இடம்பெற்றது. பிரித்தானியா அதன் கடற்படை தளத்தையும் விமானப் படைத் தளத்தையும் அவரது வேண்டுகோளின் பேரில் அகற்றியது.

சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அடுத்த கட்ட நடவடிக்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றது. குடியரசு அரசியலமைப்பின் உருவாக்கமே அது.

இந்த அரசியலமைப்புக்குப் பின், பிரித்தானிய முடியின் செல்வாக்கிலிருந்து இலங்கை முழுமையாக விடுபட்டதோடு இலங்கையின் சம்மதத்துடன் இலங்கைக்காகச் சட்டம் இயற்றுவதற்குப் பிரித்தானிய பாராளுமன்றத்துக்கு இருந்த சட்டவாக்கல் உரிமையும் ரத்தாகியது.

சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் மூன்றாவது பிரதான நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் இடம்பெற்றது. பயங்கரவாதம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்ட நிகழ்வே அது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாடு உறுதியாகியது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களே மூன்று வெவ் வேறு கட்டங்களில் சுதந்திரத்தை அர்த்தபூர்வமானதாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் என்பதை விசேடமாகக் குறிப்பிட வேண்டும்.

முழுமையான சுதந்திரத்தை அடைவதற்கு இன்னும் ஒரு கட்டத்தை நாம் தாண்டியாக வேண்டும். நாட்டின் அபிவிருத்தியிலும் சமாதானத்திலும் பூரணத்துவ த்தை அடைவதே அதுவாகும்.

இதனாலேயே, பயங்கரவாதத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையில் வெற்றியீட்டியதைத் தொடர்ந்து ஜனாதிபதி அபிவிருத்தியையும் சமாதானத்தையும் தனது நிகழ்ச்சி நிரலில் முன்னிலைப்படுத்தினார். இதற்கான அங்கீகாரத்தை மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வழங்கினர்.

சுதந்திரத்தை அர்த்தபூர்வமானதாக்கும் முயற்சி மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மக்களின் ஆதரவுடனேயே மேற்கொள்ளப்பட்டது. அபிவிருத்தியையும் சமாதானத்தையும் பூரணத்துவப்படுத்தும் பணிக்கும் மக்களின் ஆதரவு அவசியம்.

அந்த ஆதரவு நிச்சயமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஜனாதிபதித் தேர்தல் முடிவு தந்திருக்கின்றது. இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து சுதந்திரத்தை முழுமைப்படுத்துவோம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply