ஒற்றையாட்சி அடிப்படையிலான தீர்வால் நாடு 50 வருடங்கள் பின் செல்லும்: சம்பந்தன்

இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்ட தீர்வொன்றை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு முன்வைக்குமாயின் அது நாட்டை 50 வருடங்கள் பின்கொண்டுசென்றுவிடுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார். 
 
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு நம்பிக்கை இழந்திருப்பதால், சர்வகட்சிக் குழுவில் இணைந்துகொள்ளும் எண்ணம் கூட்டமைப்புக்கு இல்லையென கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிடம் சம்பந்தன் கூறினார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஆரம்பத்தில் நம்பிக்கை தந்தபோதும், தற்பொழுது அதன்மீது நம்பிக்கை இழந்துவிட்டது. அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய நிபுணர்கள் குழு இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைத்தவரை சர்வகட்சிக் குழு மீது நம்பிக்கை இருந்தது” என அவர் குறிப்பிட்டார்.

இதன் பின்னர், பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அதன் நடவடிக்கைகள் குழம்பத் தொடங்கின என்று சம்பந்தன் அந்த ஊடகத்திடம் கூறினார்.

17வது திருத்தச்சட்டமூலம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற யோசனைத் திட்டத்துடன் கூடிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்வுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகள் மேலும் மோசமடைந்தன. தற்பொழுது அதன்மீதிருந்த நம்பிக்கை இழக்கப்பட்டவிட்டது” என அவர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைகள் மூலமே இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் விரும்புகிறது. கடந்த காலத்திலிருந்த பல அரசாங்கங்களுடன் ண்புச்சுக்களையும் நடத்தியிருந்தது” என சம்பந்தன் அந்த ஊடகத்திடம் சுட்டிக்காட்டினார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி தற்பொழுது எம்மை அழைத்துள்ளார். முன்னர் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிலிருந்து வெளியேற்றிய ஜனாதிபதி தற்பொழுது தென்பகுதியில் அனுதாபத்தை ஏற்படுத்தும் நோக்கில் எம்மை அழைத்துள்ளார்” என அவர் மேலும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply