ஹக்கீம் தலைமையிலான மு. காங்கிரஸை அரசு இணைத்துக் கொள்ளாது

ரவூப் ஹக்கீம் சார்ந்த முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிடம் தெரிவித்ததாக கட்சியின் தலைவரும் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் எதிர்காலத் திட்டங்கள் சம்பந்தமாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நிப்போன் ஹோட்டலில் நடை பெற்றது. இதன்போதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களான அமைச்சர் அமீர் அலி, பிரதியமைச்சர் நிஜாமுதீன், கட்சியின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் மற்றும் சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.ஸஹீட் ஆகியோர் கலந்து கொண்டனர். இங்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் கணிசமான முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது வாக்குகளை அளித்துள்ளனர். வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்காது நிராகரித்துவிட்டதாக ஸ்ரீல.மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சொல்லித் திரிகின்றார். இதன் மூலம் முஸ்லிம்கள் ஜனாதிபதியை வெறுப்படையச் செய்து அவர்களுடைய வாக்கை தாம் பெற்றுக் கொள்ளச் செய்யும் சூழ்ச்சியாகும்.

வடக்கு, கிழக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 56 சதவீதமான வாக்குகளை முஸ்லிம்கள் அளித்துள்ளனர். திகாமடுல்ல மாவட்டத்தில் 58 ஆயிரம் வாக்குகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 35 ஆயிரம் வாக்குகள், திருகோணமலை மாவட்டத்தில் 25 ஆயிரம் வாக்குகள், வன்னி மாவட்டத்தில் 15 ஆயிரம் வாக்குகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 500 வாக்குகளை முஸ்லிம்கள் அளித்துள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் எட்டு வருடங்களுக்கு ஜனாதிபதியாக இருக்கப் போகின்றார். அவர் முஸ்லிம் நாடுகளுடன் மிகவும் நெருக்கமான உறவுகளை பேணி வருகின்றார். பலஸ்தீன மக்களுக்காக குரல்கொடுத்து வருகின்றார்.

இவ்வாறான சிறந்த தலைவருக்கு பின்னால் அனைத்து முஸ்லிம்களும் ஒன்று சேர வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் தேசியக் கொடி இன்று பறப்பதற்கு அவரே காரணகர்த்தா.

ஸ்ரீல.மு. காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் வலையில் முஸ்லிம்களும் தமிழர்களும் இனியும் நம்பிக்கை வைக்காது அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதியின் அரசாங்கத்தை பலப்படுத்துவதற்கு அனைத்து மக்களும் ஒன்றுதிரள வேண்டும்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply