இரண்டு தேசம் இணைந்த ஒன்றியம் என்ற தீர்வையே வலியுறுத்துவோம்
இரண்டு தேசம் இணைந்த ஒன்றியம் என்ற தீர்வை வலியுறுத்த அனைத்து சிறுபான்மைக்கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாம் பாராளுமன்றத் தேர்தலில் தனித்தா அல்லது இணைந்தா போட்டியிடுவது என்ற முடிவை இப்பொழுது கூற முடியாது. ஏனெனில் எமது ரெலோ அமைப்பின் நடவடிக்கைக்குழு இன்று கூடுகின்றது. இதில் முக்கியமான தீர்மானங்களை எடுத்து பின்னர் இறுதி முடிவை எடுப்போம்.
அத்துடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் எமது கட்சியும் அங்கம் வகிக்கின்றது. எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பாக விரைவில் கூட்டமைப்பு இறுதிமுடிபினை எடுக்கும். அம்முடிவுகளைப் பொறுத்தே எமது எதிர்கால நிலைப்பாடு தெரியவரும்.
கூடுதலாக அடுத்த வாரமளவில் இம் முடிவுகள் அறியக் கூடியதாக அமையும். சிறுபான்மை இனங்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே பலமாக அரசியல் பேரம் பேச முடியும். தேர்தலில் வேறு வேறாக நின்று போட்டியிட்டாலும் அரசியல் தீர்வில் ஒன்றுபடல் வேண்டும். நாம் இன்றும் நாடு பூராக வுள்ள வடக்கு கிழக்குத் தமிழ் பிரதிநிதிகள், மலையகம் மற்றும் சிங்கள இனத்தொழிலாளர் வர்க்கம் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து அரசியல் தீர்வுக்கான பேச்சு நடத்திக் கொண்டிருக்கின்றோம்.
இதில் இரண்டு தேசம் இணைந்த ஒன்றியம் என்ற தீர்வை நோக்கியே வலியுறுத்துவோம். இது தமிழீழத்திற்கு நிகரான தீர்வாக கருத முடியும். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலக்கி விட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியது. இச்செய்தியை நேசன் பத்திரிகையில் இருந்து எடுத்தே இணையங்களும் மற்ற பத்திரிகைகளும் பிரசுரித்தன.
அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தியாளர்கள் அங்கத்துவம் தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது. இது வழமையான நடவடிக்கையே ஆகும். ஆனால் என்னை விலத்தியது என்பது தவறான செய்தி என்றும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply