ஆயுதபோராட்டத்தில் தோல்வியடைந்த நாம் அரசியல் போராட்டத்தில் தோல்வியடையக் கூடாது: வினோநோகராதலிங்கம்

ஆயுதபோராட்டத்தில் தோல்வியடைந்த நாம் அரசியல் போராட்டத்தில் தோல்வியடையக் கூடாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது வடக்கு கிழக்கு மாவட்டங்களிலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளை சிதறச் செய்து, நாடாளுமன்ற தமிழ் பிரதிநிதித்துவத்தை கணிசமான அளவு குறைக்கும் நடவடிக்கைகளில் திரைமறைவுச் சதி ஒன்று தீட்டப்பட்டு வருகிறது.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வட, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு, ஓரணியாக மீண்டும் இணைந்து கொண்டுள்ளதை ஜீரணிக்க முடியாதவர்களும், கூட்டமைப்புடன் தமிழ் மக்கள் சங்கமித்துப் போவதை தடுக்க முனைபவர்களுமே என்ன விலை கொடுத்தேனும் இவ் இரகசிய திட்டத்தை அரங்கேற்ற முயல்கின்றனர்.

இதன்படி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வட-கிழக்கின் ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களிலும் குறிப்பாக வன்னி, மட்டக்களப்பு ,மாவட்டங்களில் குறைந்தபட்சம் தலா மூன்ரு சுயேட்சை வேட்பாளர் குழுக்களை நிறுத்துவதன் மூலம் தமிழ் பிரதிநித்துவத்தை தகர்க்க திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

எமது மக்களில் சிலரை பலிக்கடாவாக்கி சிலநூறு அல்லது சில ஆயிரம் வாக்குகளை பிரித்தெடுப்பதன் மூலம் தமிழ் நாடாளுமன்ற அங்கத்துவத்தினை குறைக்கலாம் என்ர இலாப நட்டக் கணக்கு போடப்படுகிறது.

இதற்காக எம்மந்த்தியில் உள்ள புத்திஜீவிகள், கல்விமான்கள், இளைஞர்கள் மத்தியில் இருந்து ஆட்சேர்க்கும் படலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கின்றோம்.

இதற்காக சாதி, மத, பிரதேச உணர்வுகள் ஊட்டப்படுகின்றன.எம்மத்தியில் இலகுவாக ஏமாறக்கூடிய சிலரை வளைத்துப்போட்டு தமது சுயநல அரசியல் இலக்கினை எட்டுவதற்கு இவர்கள் பயன்படுத்தப்பட இருக்கிறார்கள்.

தமிழ் மக்களினதும்,தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் அரசியல் பலத்தையும், ஒற்றுமை உணர்வையும் உடைத்தெறிய எடுக்கும் எந்தவொரு முயற்சிக்கும் தெரிந்தோ தெரியாமலோ நாம் துணை நிற்கக் கூடாது

இவ்விடயத்தில் தமிழ் புத்திஜீவிகள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,இளைஞர்கள், விழிப்புடனும், அவதானத்துடனும் செயற்பட வேண்டும்.வரவிருக்கும் புதிய அரசுடன் பேரம் பேசக் கூடிய சம அரசியல் பலம் எம்மிடம் இருக்க வேண்டும்.

இதை உணர்ந்து விட்டுக்கொடுப்புகளுடன் தமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட காலம் கனிந்துள்ளது.தமிழ் மக்கள் ஒன்றாக, ஒரே சிந்தனையுடன் இருக்கும்போது தமிழ் இயக்கங்கள், கட்சிகள் பிரிந்து நின்று ஒன்றுமே ஆகிவிடப்போவதில்லை.தலைமைத்துவத்தை வழங்க தகுதியற்றவர்களாகிவிடுவோம்.

ஆயுதபோராட்டத்தில் தோல்வியடைந்த நாம் அரசியல் போராட்டம் ஒன்றில் தோல்வியை சந்திக்கக் கூடாது. எம்மிடையே ஒற்றுமை குலைந்து போனால் இருப்பதையும் நாம் இழந்துவிடுவோம்.கடந்துபோன கசப்பான படிப்பினைகளை உணர்ந்து எந்த சதி முயற்சிகளையும் முறியடிக்க எமது அரசியல்பலத்தை நிலைநிறுத்த கடுமையாக நாம் உழைக்க வேண்டும்.” எனத் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply