ஆவணங்களை காண்பித்து வாகனங்களை திரும்ப பெறலாம்: யாழ் ஆயர்
இலங்கையின் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற போர் காரணமாக பொதுமக்களின் சொத்துக்கள், வாகனங்கள் என்பன எங்கும் சிதறிக்கிடந்ததைத் தாங்கள் கண்டதாக அண்மையில் அந்தப் பகுதிகளுக்கு போருக்கு பிறகு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டு திரும்பியுள்ள யாழ் ஆயர் தாமஸ் சௌந்தரநாயம் அவர்கள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இராணுவத்தின் அனுமதியோடு, அவர்களது வழித்துணையுடன் சென்று இந்த இடங்களைப் பார்வையிட்டதாகத் தெரிவித்த ஆயர் அவர்கள், முள்ளியவளை, தண்ணீரூற்று போன்ற பகுதிகளில் பெரும் எண்ணிக்கையான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை நேரில் கண்டதாகவும் கூறினார்.
இந்த வாகனங்கள் தற்போது அந்தப் பகுதி அரசாங்க அதிபரின் பொறுப்பில் இருப்பதாகவும், உரிமையாளர்கள் உரிய ஆவணங்களைக் காட்டி அவற்றைப் பெற்றுச் செல்ல முடியும் என இராணுவத்தினர் தம்மிடம் தெரிவித்ததாகவும் யாழ் ஆயர் தாமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்திருக்கின்றார்.
கடந்த வருடம் மே மாதம் விடுதலைப்புலிகள் இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, முதற் தடவையாக அவர் யுத்தம் நடைபெற்ற பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றிய மேலதிகத் தகவல்களை இன்றைய தமிழோசை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply