மக்கள் ஏன் குழம்புகிறார்கள்?

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணை கடந்த வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அதில் உரை யாற்றிய பலரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் அம்மையாரும் ஒருவர்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலை ஒட்டிக் கருத்து வெளியிட்ட அவர், தமிழ் மக்கள் மனம் குழம்பிய நிலையில் இருக்கும்போது அவர்கள் மீது அடுத்தடுத்து தேர்தல்கள் திணிக் கப்படுவதாகத் தெரிவித்து விசனம் வெளியிட்டிருக்கின்றார்.

தமிழ் மக்கள் மாத்திரமல்லர், தமிழ்த் தலைவர்களே இக்கருத்தை வெளியிட்ட பத்மினி அம்மா உட்படப் பல தமிழ்த் தலைவர்களே தமிழ் அரசியல் விவகாரத்தில் குழம்பிய நிலை யில் இருக்கின்றனர் என்பதுதான் ஸ்ரீமான் பொதுஜனத்தின் கணிப்பாகும்.

“அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவு இலங்கையில் இனங்கள் பிளவுபட்டுள்ளன என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. இனங்கள்முனை பாக்கம் பெற்றுள்ளமையை அது காட்டுகின்றது.” என்று நாடா ளுமன்றத்தில் கூறியிருக்கின்றார் பத்மினி சிதம்பரநாதன் அம்மா.

நல்லது. தென்னிலங்கை ஒரு பக்கமும் தமிழர்களின் தாய கமான வடக்கு, கிழக்கு ஒரு பக்கமுமாகப் பிளவுபட்டு நிற்பதையே அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார் என்று கருதலாம். தென்னிலங்கை தமது பக்கத்தைத் தனது வாக்குகள் மூலம் காட்டியிருக்கின்றது என்பது உறுதி. தமிழர் தாயகமான வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் தனது வாக்களிப்பின் மூலம் தமது முடிவை வெளிப்படுத்தியிருக்கின்றன என அவர் கருதுகின்றாரா? அல்லது வாக்களிக்காமல் பகிஷ்கரித்ததன் மூலம் காட்டியிருக்கின்றன என அவர் கருதுகின்றாரா? என்பது தான் நமக்குத் தெரியவில்லை. அவரது நாடாளுமன்ற உரை யில் அது தெளிவுபடுத்தப்படவில்லை. சில சமயம் இந்த விடயத்தில் அவர் இன்னும் குழம்பித்தான் இருக்கின்றார் எனக் கருதவும் இடமுண்டு. அதற்கு நியாயங்கள் உள்ளன.

பெரும்பாலான தமிழ்த் தலைவர்களும், விமர்சகர்களும், நோக்கர்களும் வடக்கு, கிழக்குத் தமிழர்கள் தமது வாக்குகள் மூலம் தென்னிலங்கைத் தெரிவை நிராகரித்துத் தமது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெளிவுபடுத்தியிருக்கின்றனர் என்கின்றனர்.
ஆனால், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், இதே பத்மினி சிதம்பரநாதன் எம்.பியுடன் சேர்ந்து யாழ். ஆயரிடம் சென்று, இத் தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு மன்றாடிய மற்றொரு யாழ். மாவட்ட எம்.பியான செல்வராசா கஜேந்திரனோ வடபகுதியில் சுமார் எழுபத்தியைந்து வீதமான தமிழர்கள் இத் தேர்தலைப் பகிஷ்கரித்து தமிழ்த் தேசியத்துக்கு உரமூட்டியுள்ளனர் எனத் தேர்தல் முடிவுகளுக்குப் புதிய வியாக்கியானம் அளித்துப் பெருமைப்பட்டிருக்கின்றார்.

பத்மினி சிதம்பரநாதன் எம்.பி. கூட ஜனவரி முதலாம் வாரம் வரை ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்காக ஒற்றைக்காலில் நின்றவர்தான். தமிழ்க்கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்துக்குள்ளேயே அதற்காக வாதாடியவர். அதன் பின்னர் இத் தேர்தல் தொடர்பில் தமிழ்க் கூட்ட மைப் பின் முடிவைப் பகிரங்கமாக அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பிரசன்னமாகித் தலையசைத்த போதிலும், கூட்டமைப்பின் முடிவை மக்கள் மத்தியில் எடுத்துச் செல் லும் பிரசாரத்தில் அவர் முனைப்பே காட்டாமல் இருந்தார்.

தமிழ்க் கூட்டமைப்பின் கடைசிப் பிரசாரக் கூட்டத்தில் திடீரெனத் தலைகாட்டிய அவருக்கு எதிர்பாராத விதமாக அதில் பேச சந்தர்ப்பமளிக்கப்பட்ட போதிலும், அதில் கூட மக் களை வாக்களிக்கச் செல்லும்படி கூட்டமைப்புத் தீர்மானத்தை வலியுறுத்தும் விதத்தில் அவர் உரையாற்றவில்லை. கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனுக்கு அக்கூட்டத்தில் “ஐஸ்’ வைத்தமையைத் தவிர (அதற்கு வேறு உள்நோக்கம் இருக்கக் கூடும் என்பது புரியத்தக்கதே) திட்டவட்டமாக அவர் ஒரு கருத்தையும் சொல்லவில்லை என்பது பலரின் ஆதங்கமாகும்.

“உண்மையில் தமிழ் மக்களில் பலர் இத் தேர்தலில் வாக்களிக்கும் மன நிலையில் இருக்கவில்லை. தங்களுக்கு நடந்த அவலத்தைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருக் கின்றார்கள். தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளைத் தேடுகின் றார்கள். மனைவிமார் தங்கள் கணவன்மாரைத் தேடுகின் றார்கள். பல வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனவர் களை அவர்களது புகைப்படங்களைக் கையில் வைத்துக் கொண்டு தேடிக்கொண்டு இருக்கின்றார்கள். சுருக்கமாகச் சொன்னால் தமிழ் மக்கள் தங்களின் நாளாந்த வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். தேடித் தேடிக் கிடைக்காத அந்த விரக்தியில் இருந்து வெறுப்பிலிருந்து தமிழ் மக்கள் இன் னும் விடுபடவில்லை.” என்றும் பத்மினி சிதம்பர நாதன் தமது நாடாளுமன்ற உரையில் கூறியிருக்கின்றார்.

உண்மைதான். அவர் கூறுவது வாஸ்தவம்தான். தமிழ் மக்கள் மாத்திரமல்லர், அவர் போன்ற அரசியல்வாதி களும் தான் தேடுகின்றார்கள். முடிந்து போகின்ற காலா வதியா கின்ற நாடாளுமன்றக் கதிரைகளை மீண்டும் பிடித் துக் கொள்வதற்கான அவர்களின் “தேடல்’ இனி சூடு பிடிக்கப் போகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் கதிரைக்குப் போட்டி போடக் கூடிய நிலையில் தாம் இல்லை என்பதால் அத்தேர்தலைப் பகிஷ்கரிக்கவும் நிராகரிக்கவும் சொன்னவர்கள் அது சிங் கள தேசத்தின் தலைமையைத் தீர்மானிக்கும் விவகாரம் என்று தமிழ்த் தேசத்தைத் தக்கவைத்து அதிகாரம் பண் ணும் வலிமையிலும், தகைமையிலும் தாங்கள் இன்னும் இருக்கின்றார்கள் என்ற கனவில் மிதந்தபடி அத்தேர்தலைப் புறக்கணிக்கும்படி தமிழர்கள் மத்தியில் பேருபதேசம் செய்தவர்கள், இப்போது புதுக்கதை கூறத் தயாராகி விட்டார்கள்.

தங்கள் எம்.பி. பதவியைத் தக்கவைப்பதற்காக, இது மட்டும் தமிழர் தேசத்தின் பொதுத் தேர்தல் என்ற மாதிரியும், இதன் மூலம் தாங்கள் எம்.பியானால் ஏதோ நிலைமையைத் தலைகீழாக மாற்றி விடுவார்கள் என்ற மாதிரியும் கதை விடத் தயாராகி விட்டார்கள்.
இவர்கள் பண்ணும் குழப்பத்தில் மக்கள் குழம்பாமல் என்ன செய்வார்கள்…….?

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply