இந்தியாவில் முடியாது? இலங்கையில் முடியும்!
கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி மத்திய கபினற் அமைச்சராக இருக்கின்றார். இரசாயனத் துறை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சு தொடர்பான கேள்விகள் மக்களவையில் கேட்கப்படும் சந்தர்ப்பங்களில் அவற்றுக்குப் பதிலளிப்பதற்கு அமைச்சர் அழகிரி சபையில் இருப்பதில்லை என்று சொல்கின்றார்கள். உதவி அமைச்சரே கேள்விகளுக்குப் பதில் அளிப்பதோடு விளக்கங்களும் அளிக்கின்றார்.
அமைச்சர் அழகிரிக்கு ஆங்கிலத்திலோ ஹிந்தியிலோ பேசவராது. அதனாலேயே அமைச்சு தொடர்பான விளக்கங்கள் அளிக்க வேண்டிய வேளைகளில் சபையிலிருந்து வெளியேறிவிடுகின்றார் என்று இந்திய அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது. பாராளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான அனுமதி கேட்டு இவர் சபாநாயகருக்கு விண்ணப்பித்திருக்கின்றார். அதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை.
சபாநாயகர் மீரா குமார் அண்மையில் சென்னைக்கு விஜயம் செய்தபோது அமைச்சர் அழகிரியின் விண்ணப்பம் தொடர்பாக நிருபர்கள் அவரிடம் கேட்டனர். “அந்த விண்ணப்பம் தொடர்பாக ஏதாவது ஏற்பாடு செய்வதற்காக என்னைச் சந்திக்கும் படி அமைச்சருக்கு அறிவித்துள்ள போதிலும் இதுவரை அவர் என்னைச் சந்திக்கவில்லை” என்பதே சபாநாயகரின் பதிலாக இருந்தது. ஏதாவது ஏற்பாடு செய்வது பற்றிச் சபாநாயகர் கூறினாரேயொழியத் தமிழில் பேசுவதற்கு அனுமதி அளிப்பதாகக் கூறவில்லை.
தமிழ் மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து பெற்றுக்கொடுத்தவர் என்று கலைஞர் கருணாநிதியை எல்லோரும் பாராட்டுகின்றார்கள். இப்போது கலைஞர் கோவையில் செம்மொழி மகாநாடு நடத்தும் முயற்சியில் தீவிரமாக இருக்கின்றார். ஆனால் இந்தச் செம்மொழியில் பாராளுமன்றத்தில் பேச முடியவில்லை. கலைஞரின் கட்சியைச் சேர்ந்த அமைச்சர், அதுவும் அவரது மகன் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையை முன்வைத்துத் தமிழ்நாட்டில் வன்முறைப் போராட்டங்கள் நடத்தும் அரசியல் தலைவர்களும் சினிமா உலகப் ‘புள்ளி’களும் நின்று நிதானமாக இதுபற்றிச் சிந்திக்க வேண்டும். இந்தியாவின் பாராளுமன்றத்தில் தமிழில் பேச முடியாது. இலங்கைப் பாராளுமன்றத்தில் தாராளமாகத் தமிழில் பேசலாம். அந்தப் பேச்சு ‘ஹன்சாட்’டில் தமிழிலேயே பிரசுரமாகும்.
இலங்கைத் தமிழர் மீது பெரிய கரிசனை காட்டும் தமிழக சினிமா உலகப் பிரமுகர்கள் அதே கரிசனையை இந்தியாவில் வாழும் தமிழர்கள் மீதும் காட்டலாமே. இந்தியாவிலுள்ள தமிழ் எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று ஒரு போராட்டத்தை நடத்தலாமே. இந்தப் போராட்டத்தினால் இவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அதனால் நடத்த மாட்டார்கள்.
புலிகளின் ஆதரவாளர்களே மேற்கத்திய நாடுகளில் தமிழ்ப் படங்களை விநியோகிப்பவர்கள். மேற்கத்திய நாடுகளில் தமிழ்ப் படங்களைத் திரையிடுவதன் மூலமே படாதிபதிகளுக்கு லாபம் கிடைக்கின்றது. எனவே தான் தமிழக சினிமாப் பிரமுகர்கள் புலி ஆதரவுப் போராட்டம் நடத்துகின்றார்கள். இது அவர்களுக்கு சீவனோபாயப் பிரச்சினை.
கலைஞர் கருணாநிதியின் திரையுலகப் பணியைப் பாராட்டும் விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய நடிகர் அஜித், நடிகர்கள் போராட்டங்களில் பங்கு பற்றுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply