போர் நிறுத்தம் தீர்வாகாது; அரசியல் தீர்வு ஏற்படுவதற்கான அழுத்தத்தை தமிழக அரசும், இந்திய அரசும் வழங்க வேண்டும் : அருளர்
”புலிகளின் பயங்கரவாத போக்கை முதலில் ஈரோஸ் அமைப்பே இனங்கண்டது.”
‘மனித அழிவுகளைக் காரணம் காட்டி இலங்கையில் போர்நிறுத்தம் செய்வது சரி அல்ல. மேலும், அதன் மூலம் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படாது ‘ என்று ஈரோஸ் தலைவர்களில் ஒருவரான அருளர் அருட்பிரகாசம் தெரிவித்தார். இது குறித்து ஈரோஸ் அருளர் அருட்பிரகாசம் சென்னையில் நேற்று கூறியதாவது: ”தமிழ் மக்கள் தமது தாயகமாக கொண்டுள்ள வடக்கு, கிழக்கு பிராந்தியத்தில் தமிழ் மக்களின் தேசத்துவத்தை, ஒன்றுபட்ட இலங்கைக்குள் நிறுவ வேண்டும்; மத்திய அரசில் தமிழ் மக்களின் பங்கை உறுதி செய்தல்; தமிழ் மக்கள் தங்கள் வாழ்வை ஆரம்பிக்கும் வகையில் முழுமையான நஷ்ட ஈட்டைப் பெறுதல் என்பதே எங்களது அமைப்பின் கோரிக்கைகள்.
இலங்கையின் சமஸ்டி அமைப்பில் தமிழர்களுக்கான பகுதி அவர்களுக்கும், சிங்களர்களுக்கான நிலப்பகுதி அவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதுதான் இலங்கைத் தமிழர்களின் விருப்பமாக உள்ளது. மனித அழிவுகளைக் காரணம் காட்டி இலங்கையில் போர்நிறுத்தம் செய்வது சரியானது அல்ல; அதன் மூலம் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படாது. அரசியல் தீர்வு ஏற்படுவதற்கான அழுத்தத்தை தமிழக அரசும், இந்திய அரசும் வழங்க வேண்டும். போர்நிறுத்தத்திற்கு புலிகள் சம்மதம் தெரிவித்ததாகக் கூற முடியாது. தமிழகத்தில் இருந்து விடுத்த கோரிக்கைக்கு அவர்கள் பதில் மட்டுமே அளித்துள்ளனர். இலங்கையின் கடைசித் தமிழர் அழியும் வரை போர் புரிய வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
இலங்கைத் தமிழர்களின் அழிவுக்கு இலங்கை அரசு எவ்வளவு காரணமோ, அதே அளவு புலிகளும் காரணமாக இருந்துள்ளனர். அவர்கள் எடுத்த முடிவுகள், இலங்கைத் தமிழர்களின் அழிவுக்கு வழிவகுத்துள்ளன. புலிகளின் பயங்கரவாத போக்கை முதலில் ஈரோஸ் அமைப்பே இனங்கண்டது. இலங்கை அரசின் இடைவிடாத ராணுவ பயங்கரவாதத்தை காரணமாக காட்டி, புலிகள் தங்களின் ராணுவ அணுகுமுறையை நியாயப்படுத்தி நின்றனர். ஈழப் போராட்டத்தில், புலிகள் பல தவறுகளைச் செய்துள்ளனர்.
புலிகளின் நடவடிக்கைகளால் இலங்கை தமிழ் மக்களின் போராட்டத்திற்கு இருந்துவந்த சர்வதேச ஆதரவு, படிப்படியாக குறைந்து வந்து, இறுதியில் முழுவதுமாக இல்லாமல் போயுள்ளது. விடுதலைப் புலிகளின் செயல்பாட்டில் உலகம் சலிப்படைந்துள்ளது. மற்ற போராட்டக் குழுக்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்ட யுத்தம், ஈழப் போராட்டத்தை சின்னா பின்னமாக்கி, தமிழ் சமுதாயத்தை குதறித் தள்ளியுள்ளது. ராஜிவ் கொலை சம்பவம் ஒரு சுதந்திர தமிழினத்தை குழி தோண்டிப் புதைத்ததோடு, இந்தியாவை தமிழ் மக்களிடத்தில் இருந்து அன்னியப்படுத்தியது” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply