பொன்சேக்காவின் நிவாரண கோரிக்கை உச்ச நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

இராணுவ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவை நிபந்தனையுடனோ அல்லது நிபந்தனையின்றியோ விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்டிருந்த வேண்டுகோளை உச்ச நீதிமன்றம் நேற்று  நிராகரித்தது. அடிப்படை மனித உரிமை மீறும் அறிக்கையொன்றை விடுக்குமாறு கேட்டு ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் இருவர் தாக்கல் செய்திருந்த மனுவில் நிவாரணம் வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அம்சங்களை நிராகரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரரான சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ சட்டத்தின் கீழ் இடம்பெறும் விசாரணையின்போது சாட்சியம் வழங்கப்பட்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில், விடுதலை செய்யும் நிவாரணத்தை பெற்றுத்தர முடியாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பதில் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க, உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஜகத் பாலபட்டபெந்தி மற்றும் கே. ஸ்ரீபவன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (23) விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சரத் பொன்சேகா கேட்டுள்ள மற்றைய நிவாரணம் ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

மனுதாரர் அவரது மனைவி உட்பட அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை சந்திக்கவும், தேவையான மருத்துவ வசதிகளை பெறவும், சத்திய கடதாசியில் கையொப்பமிடவும், வெளிநாட்டில் உள்ள மகளுடன் தொலைபேசியில் உரையாடவும், எதிர் வரும் பொதுத்தேர்தலுக்கான அவரது வேட்புமனு மற்றும் சட்ட ஆவணங்களில் கையெழுத்திடவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இது தொடர்பாக சட்ட மா அதிபரிடம் விசாரித்து, அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர் தரப்புக்கு கூறப்பட்டது.

சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா, புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் சட்டத்தரணி சாமிலா பெரேரா ஆகியோர் மற்றைய இரு மனுக்களையும் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக இராணுவ தளபதி லெப்டினன்ட் கர்னல் ஜகத் ஜயசூரிய, மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பிரிகேடியர் விஜேசிரி மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணையும் நேற்று இடம்பெற்றது.

அந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டபோது சாட்சிகள் சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை மற்றும் தேவையான ஆவணங்களை வழங்க முடியாதிருந்ததாக சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்தார். இது உச்ச நீதிமன்ற சட்டம் 45 (3)க்கு எதிராக இருப்பதாக சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டியதையடுத்து, பதில் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க இந்த விடயத்தை அடிப்படை எதிர்ப்பு மனு விசாரணையின் போது எழுப்புமாறு கூறினார்.

அத்துடன் மனித உரிமை ஆணைக் குழுவுக்கு சரத் பொன்சேகா வழங்கிய வாக்கு மூலத்துடன் தொடர்பான அறிக் கையை உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலதிக விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply