தமிழ் பேசும் மக்களே! பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக வாக்களியுங்கள்!!
கனடிய தமிழர் ஜனநாயக விழிப்புணர்வு மன்றம் வேண்டுகோள்.
இலங்கையில் 2010 ஜனவரி 26ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதைத் தொடர்ந்து, ஏப்ரல் 08ம் திகதி பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. 1948ல் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து, பாராளுமன்ற ஜனநாயகத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் நாடுகளில் ஒன்று என்ற வகையில், இத்தேர்தல் இலங்கை மக்களுக்கு மிக முக்கியமானதாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் உருவத்தில், இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்படும் ஒரு சூழ்நிலை உருவான போதும், நாட்டு மக்களில் பெரும்பாலோர் எடுத்த, புத்திசாலித்தனமானதும், தீர்க்கதரிசனமிக்கதுமான முடிவால், அவர் தோற்கடிக்கப்பட்டு, ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டமை, நமது நாட்டு மக்கள் ஜனநாயகத்தின் மீது கொண்டிருந்த அசையாத பற்றுறுதியை எடுத்துக்காட்டியது.
இருப்பினும், தமிழ் மக்களுக்குத் தலைமைதாங்கிய பிரதான அரசியல் கட்சியான பிற்போக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, படுபிற்போக்கான ஐக்கிய தேசியக்கட்சியுடனும், இனவாத ஜே.வி.பியுடனும் இணைந்து, ஏகாதிபத்தியக் கைக்கூலியும், பேரினவாதியும், போர்வெறியருமான சரத் பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்பது என்று எடுத்த, தவறானதும், முட்டாள்தனமானதுமான முடிவால், தமிழ் மக்களில் பெரும்பான்மையோர் பொன்சேகாவுக்கு வாக்களித்த, தூரதிஸ்ட வசமான ஒரு நிலைமை ஏற்பட்டது. அதன் மூலம,; தமிழர்கள் நாட்டின் சுதந்திரம், இறைமை, ஜனநாயகம் என்பனவற்றுக்கு எதிரானவர்கள் என்ற, நீண்ட காலமாக ஊறிப்போன தவறான அபிப்பிராயத்தை, மீண்டும் ஒருமுறை நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டுள்ளனர்.
இந்தத் தவறை வரப்போகும் பொதுத் தேர்தலின் போது களைந்து, நாட்டின் பெரும்பான்மையான மக்களுடன் கைகோர்த்துச் செயல்பட வேண்டியது, தமிழ் பேசும் மக்கள் அனைவரினதும் தலையாய கடமையாகும். தற்போது பதவியிலுள்ள பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம், தமிழ் பேசும் மக்களுக்கு கடந்த காலங்களில் அளப்பரிய சேவைகளைச் செய்துள்ளதை அந்த மக்கள் இத்தேர்தலின் போது கணக்கில் எடுத்து, தமது வாக்குகளை சரியான முறையில் அளிக்க வேண்டும். அதில் குறிப்பாக, அரசாங்கம் கடந்த 30 வருடங்களாக, தமிழ் பேசும் மக்களின் மேல் பெரும் பாறாங்கல்லாக அழுத்திக் கொண்டிருந்த, புலிப் பாசிசப் பயங்கரவாதத்தை அழித்தொழித்து, தம்மை அதனின்றும் மீட்டெடுத்ததை, அந்த மக்கள் நினைவில் கொள்வது அவசியமானது.
அது மட்டுமின்றி, புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இடம் பெயர்ந்த மக்களை வேகமாக மீளக் குடியமர்த்தி வருவதுடன், தமிழ் பிரதேசங்களின் பொருளாதார அபிவிருத்தியிலும், அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றது. அத்துடன் யுத்தம் காரணமாக ஏற்படுத்தப்பட்ட உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவதிலும், புலிகளால் பலவந்தமாக யுத்து முனைக்கு பிடித்துச் செல்லப்பட்ட சிறுவர்களைப் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்வதிலும், பொருத்தமான நேரத்தில் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதிலும், அரசாங்கம் ஆக்கபூர்வமான பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அதுமாத்திரமின்றி, நாட்டின் சுதந்திரத்தையும், சுயாதிபத்தியத்தையும், இறைமையையும் அழித்தொழித்து, இலங்கையை தமது நவ காலனியாக்க நாடாக மாற்ற, மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகள் எடுத்து வரும், சதி மற்றும் நாசகார நடவடிக்கைகளையும் இன்றைய அரசு துணிச்சலுடனும், திட சங்கற்பத்துடனும் முறியடித்து வருகின்றது.
இவை தவிர, தமிழ் பேசும் மக்களின் நீணடகால தேசிய இனப் பிரச்சினைக்கு 13வது திருத்தச் சட்டத்துக்கும் அப்பால் சென்று தீர்வு காணப்போவதாகவும், அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது. இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உதவும் முகமாக, பாராளுமன்றத்திற்கு மேலதிகமாக மேற்சபை ஒன்றையும் அமைக்கப் போவதாக, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ வாக்குறுதி அளித்துள்ளார். அரசாங்கம் பயன்மிக்க இந்த நடவடிக்கைகளைச் செய்வதானால், அதற்கு தற்போதைய அரசியல் அமைப்பின்படி, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமானது. அத்துடன் அவ்வாறு பெரும்பான்மை பெறும் அரசு, அடுத்த 7 வருடங்களுக்கு ஜனாதிபதியாக இருக்கப் போகின்ற மகிந்த ராஜபக்ஸவுடன் ஒத்துழைத்துச் செயல்படும் அரசாங்கமாகவும் இருக்க வேண்டும்.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், தற்போதைய அரசாங்கம் நிச்சயம் வெற்றிபெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வரும் முற்போக்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு, எதிர்வரும் பொதுத் தேர்தலில், நாட்டு மக்கள் தற்போதைய பொதுசன ஐக்கிய முன்னணி அரசை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் தெரிவு செய்வது அவசியமானது. குறிப்பாக தற்போதைய அரசியல் அமைப்பை மாற்றுவதின் மூலம், பெரும் நன்மை பெறப்போகும் தமிழ் பேசும் மக்கள், பொதுசன ஐக்கிய முன்னணிக்கே தமது வாக்குகளை அளித்து, அதை அமோக வெற்றி பெறச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
எனவே வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும், மேல்மாகாணத்திலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் அனைவரும், எதிர்வரும் பொதுத்தேர்தலில், பொதுசன ஐக்கிய முன்னணிக்கே தமது வாக்குகளை அளிப்பது அவசியமானது. கடந்த காலங்களில் செய்தது போன்று, பிற்போக்குக் கட்சிகளான ஐ.தே.க, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரஸ் என்பனவற்றுக்கோ அல்லது அரசியல் அரங்கில் எதுவித தாக்கத்தையும் உண்டுபண்ண முடியாத உதிரிக் கட்சிகளுக்கோ வாக்களிப்பது, பயனற்றது என்பதை தமிழ் பேசும் மக்கள் புரிந்து கொள்வது அவசியமானது. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கடந்த காலங்களில் புலிகளின் ஒரு பினாமி அமைப்பாகச் செயற்பட்டு வந்ததுடன், புலிகளின் உத்தரவுக்கிணங்க, இனப்பிரச்சினைக்காக பதவியில் இருந்த அரசாங்கங்கள் எடுத்த சகல முயற்சிகளையும் குழப்பி வந்துள்ளதால், அக்கட்சியை இத்தேர்தலில் மக்கள் முற்றுமுழுதாகத் தோற்கடிக்க வேண்டும்.
தமிழ் பேசும் மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் விட்ட தவறை, மீண்டும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலும் விடாது, பொது சன ஐக்கிய முன்னணிக்கு வாக்களித்து, அதை அமோக வெற்றியீட்ட வைப்பதின் மூலம், தேசத்தின் முன்னேற்றப் பாதையில், அனைத்து முற்போக்கு மக்களுடனும் கைகோர்த்து முன் செல்ல, இத் தேர்தலை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்த வேண்டும் என ‘கனடியத் தமிழர் ஜனநாயக விழிப்புணர்வு மன்றம்’ வேண்டிக் கொள்கிறது.
கனடியத் தமிழர் ஜனநாயக விழிப்புணர்வு மன்றம்
ரொறன்ரோ
E-Mail – demovizhippu@hotmail.com
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply