இலங்கை அரசின் எதிர்ப்பை ஏற்க முடியாது:பான் கீ மூன்

நிபுணர் குழுவை நியமிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், உரிய நேரத்தில் நிபுணர்கள் குழு நியமிக்கப்படும் எனவும் பான் கீ மூன் செய்தியாளர் மாநாடொன்றில் குறிப்பிட்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை தொடர்பிலான நிபுணர்கள் குழு நியமிப்பதற்கான பூரண அதிகாரம் காணப்படுகிறதென தெரிவித்த ஐ.நா செயலாளர், தமது அதிகாரங்களை மீறி ஐ.நா. செயற்படுவதாக அணிசேரா நாடுகள் அமைப்பு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசேட நிபுணர்கள் குழுவினர், பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கவுள்ளனர்.

நிபுணர் குழுவொன்றை ஐ.நா. செயலாளார் பான் கீ மூன் நியமிக்கவுள்ளதாக அறிவித்ததையடுத்து இந்நியமனம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். ஐக்கிய நாடுகளின் இந்த நடவடிக்கை எதிர்வரும் பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனவும், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி செயலகம் கடந்த 6 ஆம் திகதி அறிக்கை வெளியிட்டிருந்தது.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தாம் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இரு தரப்புக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே நிபுணர்கள் குழு நியமிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்கள் குறித்த விசாரணைகளுக்கான நியமங்கள், சட்ட திட்டங்கள் போன்றவை தொடர்பில் நிபுணர்கள் குழு தமக்கு ஆலோசனை வழங்கும் எனத் தெரிவித்த அவர், இந்த நடவடிக்கை இலங்கையின் இறைமையை எந்த வகையிலும் பாதிக்காது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் அணிசேரா நாடுகளின் அழுத்தம் காரணமாக நிபுணர்கள் குழு நியமனத்தில் கால தாமதம் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார். எனினும், நிபுணர்கள் குழுவின் நியமனம் தொடர்பில் உறுதியான காலக்கெடுவை அறிவிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply