65 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளால் ஐ.ம.சு.மு வெற்றிபெறும்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணி 65 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பொன்று கூறுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு வழங்கிய ஐ. தே. க, ஜே. வி. பி. முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இப்போது அரசாங்கத்துடன் இணைந்து வருகின்றனர் என்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய அவர் மேலும் கூறியதாவது :- பாராளுமன்றத் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணி 2/3 பலத்துடன் அமோக வெற்றியீட்டுவது உறுதியாகிவிட்டது. தேர்தல் பிரசாரப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

ஜனாதிபதி முன்வைத்துள்ள மஹிந்த சிந்தனை தொலைநோக்குத் திட்டத்தை அமுல்படுத்த பலமான பாராளுமன்றம் ஒன்றை அமைக்கவே மக்கள் ஆணையை கோருகிறோம். ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்த மக்கள், பொதுத் தேர்தலில் அவரைப் பலப்படுத்த மீண்டும் வாக்களிக்க உள்ளனர். பிரித்தானிய ஆட்சியின் பின் முதற் தடவையாக மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலேயே பிரிந்துள்ள மக்கள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளனர். மக்கள் ஒன்றுபடுவதன் மூலமே நாட்டை துரிதமாக அபிவிருத்தி செய்ய முடியும். யுத்த சமயத்தில் கூட மக்கள் கட்சி, இன, மத ரீதியாகப் பிரிந்தே இருந்தனர்.

யுத்தம் முன்னெடுக்கப்பட்ட போது ஐ. தே. கவும் ஜே. வி. பியும் எம்முடன் இணைந்திருந்தால் யுத்த வெற்றியின் கெளரவத்தை பெற்று மேலும் பலமடைந்திருக்கலாம். ஆனால் அவை இன்று மக்களால் புறக்கணிக்கப்பட்டு புதைகுழிக்குள் விழுந்துவிட்டன என்றார். இங்கு உரையாற்றிய சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், இம்முறை சப்ரகமுவ மாகாணத்தில் இருந்து ஐ. ம. சு. முன்னணி சார்பாக 15 எம்.பிக்கள் தெரிவு செய்யப்படுவர். கேகாலையில் இருந்து ஏழுபேரும் இரத்தினபுரியில் இருந்து 8 பேரும் தெரிவாவது உறுதி என்று கூறினார்.

ஐ. ம. சு. முன்னணிக்கு மக்கள் 2/3 பெரும்பான்மை பலத்தை வழங்குவது உறுதி. 8 மாகாண சபைகளிலும் ஐ. ம. சு. முன்னணி பெரும் வெற்றியீட்டியது போல பொதுத் தேர்தலிலும் அமோக வெற்றியீட்டும். ஐ. தே. கவையும் ஜே. வி. பியையும் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply