போரைவிட வேகமான போர்நிறுத்தம் தேவை: மனோ கணேசன்

இலங்கை அரசாங்கம் போரை முன்னெடுத்திருக்கும் வேகத்திலும்விட கூடுதலான வேகத்தில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என ஐனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
 
விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்யுமாறு அரசாங்கத்தை ஒருபோதும் கோரப்போவதில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். இந்தக் கருத்துத் தொடர்பாகவே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறினார்.
போர்நிறுத்தமொன்றின் தேவை இலங்கையில் எல்லா மக்களையும்விடத் தமிழ் மக்களுக்கே மிக மிக அதிகமாக உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், போர்நிறுத்தத்தின் அவசியம் தமிழர்களுக்கே புரியும் எனக் கூறினார்.
போர்நிறுத்தமொன்றைக் கோரவில்லையெனக் கூறியிருக்கும் செனவிரட்ன, அரசியல் தீர்வொன்று அவசியமெனக் கூறியிருப்பது வரவேற்கத் தக்கது. எனினும், போரை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னரே அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்படும் என அரசாங்கமோ அல்லது எதிர்க்கட்சியோ கூறுமாயின் அதனை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாரில்லை” என்றார் மனோ கணேசன்.

தேர்தல் பிரசாரமாகவே பார்க்கிறோம்

இதேவேளை, போர்நிறுத்தத்தைக் கோரவில்லையென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்தை, தேர்தலுக்குத் தயாராகும் கருத்தாகவே தாம் நோக்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

போர்நிறுத்மொன்று தற்பொழுது அவசியமாகியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், போரை நிறுத்தி பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை மீட்சிபெறச் செய்வதற்கு போர்நிறுத்தம் அவசியம் தேவைப்படுவதாகக் கூறினார்.

இதுவரை காலமும் கடைப்பிடித்த பிழையான நிலைப்பாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் இந்தக் கருத்தானது, இதுவரை காலமும் அவர்கள் அரசாங்கத்துக்கு எதிராகக் கடைப்பிடித்துவந்த கொள்கையைக் கைவிட்டு உண்மையை அறிந்துகொண்டிருப்பதைப் புலப்படுத்துவதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்தார்.

எனினும், அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியும், இலங்கை அரசாங்கமும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது தமக்கு சந்தேகத்தைத் தோற்றுவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply