இலங்கையின் உள்விவகாரங்களில் வெளியார் தலையிட இடமளியோம்: பிரதமர்
இறைமையும், ஆட்புல ஒரு மைப்பாடும் மிக்க இலங்கையின் உள் விவகாரங்களில் வெளியார் எவரும் தலையிட இடமளியோம் என்று பிரதமர் ரத்னசிறி விக்கிரம நாயக்கா நாரம்மலவில் நேற்று முன்தினம் தெரிவித்தார். உள்ளூர், வெளியூர் அழுத்தங்களை முழுமையாக இல்லாமல் செய்வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். பொதுத் தேர்தலின் நிமித்தம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாவட்ட மட்டத்தில் நடாத்தும் பிரதான பிரசாரக் கூட்டம் குருநாகல், தம்பதெனிய யு. பி. விஜயகோன் விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் நாம் செயல்வீரர்கள். இலக்கை நோக்கி நாட்டு மக்களை அழைத்துச் செல்பவர்கள். கோழியை நரியிடம் கொடுக்கும் வேலை எம்மிடம் கிடையாது. நாட்டின் விமோசனத்தையும், சுபீட்சத்தையும் கருத்தில் கொண்டு திட்டங்களை வகுத்துச் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள்.
அந்த வகையில் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறும் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். எமது துரித அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொழில் நுட்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். நாட்டின் துரித அபிவிருத்தியே எமது இலக்கு. இதற்காக வலுவான பாராளுமன்றத்தை அமைக்கவே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை மக்களிடம் கேட்டிருக்கின்றோம்.
இதனூடாக அரசியல் யாப்பை மாற்றி ஜனநாயக நெறிமுறையை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். இந்த அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கும் தேர்தல் முறை நாட்டுக்கு உகந்ததல்ல. இம்முறைமை மக்களின் பிரதிநிதிகளுக்கும், மக்களுக்குமிடையிலான நெருக்கமான உறவை குறைத்துள்ளது.
இத்தேர்தல் முறையிலுள்ள விருப்பு வாக்கு முறை காரணமாக ஒரே கட்சிக்குள்ளேயே சண்டைகளும், சச்சரவுகளும், குத்துவெட்டுக்களும் இடம்பெறுகின்றன. இவை நாட்டின் துரித அபிவிருத்திக்குப் பெரும் தடையாக உள்ளன. அதனால் தொகுதிவாரி தேர்தல் முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
இதேநேரம் எமக்கு எதிராக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. எமது உள்விவகாரங்களில் பங் கி மூன் தலையிடுகிறார். இதற்கு எமது ஆட்களே வழி செய்துள்ளனர். ஆனால் இறைமையும் ஆட்புல ஒருமைப்பாடும் மிக்க இந்நாட்டின் உள்விவகாரங்களில் வெளியார் எவரும் தலையிட முடியாது. அதற்கு நாம் இடமளியோம்.
ஆகவே, நாட்டு மக்கள் எதிர்வரும் 8ம் திகதி ஐ. ம. சு. முன்னணியை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்து எம் மீது அழுத்தம் செய்பவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply