கட்சிபேதமின்றி சகலரும் பங்கேற்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம்:பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்
தேர்தலின் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி கூடும் பாராளுமன்றத்தில் தேர்தல் மறுசீரமைப்புக்கும், கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் நாட்டின் முன்னேற்றத்திற்காக பங்களிப்பு செய்யக்கூடிய விதத்தில் அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கும் முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தினுள் எதிர்க் கட்சியினரை வேறுபடுத்தி வைக்காமல் நாட்டின் நன்மைக்காக, அபிவிருத்திக்காக மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களுக்கும் அவர்களது பங்களிப்பை நேரடியாக பெற்றுக் கொள்ளவும், அவர்கள் தாமாகவே முன்வந்து பங்களிப்பை செய்யக்கூடிய விதத்தில் அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்படும்.
குறிப்பாக இவ்வாறான நடவடிக்கைக்கு அரசியலமைப்பில் தடைகள் உள்ளதா என்பது பற்றி ஆராயவும், அவற்றை களையவும் முன்னுரிமை வழங்கப்படும். நடைபெறவுள்ள தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டுக்கு அதிக வாக்குகளை பெறுவது மட்டுமல்லாமல் பலம்மிக்க பாராளுமன்றத்தையும் உருவாக்குவது உறுதியாகியுள்ளது.
நாட்டின் நலனுக்காகவும் பொது நோக்கத்திற்காகவும் அனைத்து தரப்பினரையும் நேரடியாக பங்களிப்பு செய்ய வைப்பதே ஜனாதிபதியின் நோக்கமாகும். இந்த நடைமுறை டொனமூர் ஆட்சி முறையின் கீழ் இருந்தது. அத்துடன் நாட்டின் நலனுக்காக தன்னோடு இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
எவரையும் ஒதுக்கி வைப்பது அவரது நோக்கமல்ல. அதற்கான தேவை இன்று உணரப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் முறையில் மாற்றம் தேவை என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதற்கென அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்ட தேர்தல் மறுசீரமைப்புக்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவும் அடித்தளமொன்றை அமைத்துள்ளது. தற்போதுள்ள விகிதாசார தேர்தல் முறையின் காரணமாக கட்சிகளுக்கிடையே முறுகல்கள், மோதல்கள் ஏற்படுவதற்கு பதிலாக கட்சிக்குள்ளேயே பிளவுகளும், மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன.
அதேவேளை ஊழல் இடம்பெறுவதற்கும் இந்த விகிதாசார தேர்தல் முறையே அடிப்படையாக அமைந்துள்ளது. மேலும் பலமுள்ளவர்களுக்கு மட்டுமே சந்தர்ப்பங்கள் கிடைக்கவும், பலமற்றோர் பாதிக்கப்படுவதற்கும் இந்த தேர்தல் முறை வழிவகுக்குகின்றது. சில தொகுதிகளுக்கு உறுப்பினர்கள் இல்லாமலும், சில தொகுதிகளுக்கு இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதையும் விகிதாசார தேர்தல் முறையில் காணலாம். இவை நீக்கப்பட வேண்டும் என்பதில் அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் உள்ளனர். இதனை நீக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை யுடன் கூடிய பலம் மிக்க அரசு தேவைப்படுகிறது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply