மக்கள் நலனுக்காக எந்தவொரு அழுத்தத்தையும் எதிர்நோக்கத் தயார்: ஜனாதிபதி
நாட்டுக்கு எதிரான சர்வதேச சக்திகளை நன்கறிந்துள்ள நான் இந்நாட்டு மக்களுக்காக எந்த அழுத்தத்திற்கும் முகம் கொடுப்பதற்கும் தயாராக உள்ளேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் பண்டாரகமவில் தெரிவித்தார். நாட்டு மக்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு எனது வாழ்நாளில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களையும், அழுத்தங்களையும் கருத்தில் கொள்ளாது செயற்பட்டேனேயன்றி தனிப்பட்ட இலாபங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அல்ல என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தலின் நிமித்தம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜனாதிபதி தலைமையில் மாவட்ட மட்டத்தில் நடத்தும் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் பண்டாரகம பொது விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், எனக்கு எதிராக பலவிதமான பொய்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவற்றை நாட்டு மக்கள் நிரகரித்து விட்டார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நான் முகம் கொடுத்த அச்சுறுத்தல்களிலிருந்து என்னை மீட்டெடுத்தது இந்நாட்டு மக்கள்தான். எனக்கு இந்த நாட்டை விடவும் பெறுமதி யானது எதுவுமே இல்லை. அதனால் விடுவிக்கப்பட்டி ருக்கும் நாட்டைப் பாதுகாப் பதற்கும், கட்டியெழுப்புவதற்கும் நாட்டு மக்கள் தான் வலு சேர்க்க வேண்டும்.
நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எஞ்சியிருப்பது வலுவாகவும், துரிதமாகவும் முன்னெடுக்க வேண்டிய வேலைகள்தான்.
நான் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் போது சபாநாயகர் ஒருவரைத் தெரிவு செய்து கொள்ள முடியாத பாராளுமன்ற ஆட்சி அதிகாரமே ஐ.ம.சு. முன்னணிக்கு இருந்தது. என்றாலும் அண்மையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போது 47 மேலதிக ஆசனங்களைக் கொண்டதாக அரசாங்கம் இருந்தது. அதனால் சகலரும் ஒற்றுமையாக செயற்படுங்கள்.
2005 ஆம் ஆண்டில் நான் மஹிந்த சிந்தனையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். அச்சமயம் நாடு பிளவுபட்டிருந்தது. கடல் பரப்பில் மூன்றிலிரண்டு பகுதியும், சிங்கப்பூரைப் போன்ற 23 பங்கு நிலப்பரப்பும் பயங்கரவாதிகளிடம் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தது.
அவர்கள் தனியான பொலிஸ், இராணுவம், நீதிமன்றங்கள் போன்ற கட்டமைப்புக்களைக் கொண்டிருந்தார்கள். அவர்களை அச்சமயம் ஏதாவது ஒரு நாடு ஏற்றுக் கொண்டிருந்தால் நிலமை வேறுவிதமாக அமைந்திருக்கும்.
அதனால் பதவிக்கு வந்ததும் தாயகத்தின் மீது அன்பு கொண்ட சக்திகளை இணைத்துக் கொண்டு நாட்டை மீண்டும் ஐக்கியப்படுத்தும் நடவடிக்கையை மக்களின் வேண்டுகோள்படி மேற்கொண்டேன். அந்தவேளையில் சபாநாயகர் ஒருவரை எம்மால் தெரிவு செய்ய முடியாத பாராளுமன்றம் இருந்த போதிலும் பாராளுமன்றத்தைக் கலைத்து நான் தேர்தல் நடத்தவில்லை. மாறாக நிலைமையை உணர்ந்து துரிதமாகச் செயற்பட்டேன்.
மக்களின் வேண்டுகோள்படி நாட்டைக் குறுகிய காலத்தில் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்து ஐக்கியப்படுத்தி யுள்ளேன். அத்தோடு நின்றுவிடாமல் அரச துறையை வலுப்படுத்தவும், நாட்டைத் துரித அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லவும் நடவடிக்கை எடுத்தேன். நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தாயகத்தைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்தவே நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
இதனடிப்படையில் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. வீதிகள், துறைமுகங்கள், நீர்ப்பாசனத்துறை மின்னுற்பத்தி, மின்வழங்கல் உட்பட சகல துறைகளும் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. நாம் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகத்தான் கடன் பெறுகின்றோம். மாறாக கடந்த கால ஆட்சியாளர்களைப் போன்று உண்பதற்காக அல்ல. அந்த ஆட்சிக் காலங்களில் கோதுமை மாவுக்கென மில்லியன் கணக்கில் கடன் பெறப்பட்டிருக்கின்றது. அந்தக் கடன்களை இன்றும் நாம் வட்டியுடன் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் நாம் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான பொறுப்பை எமது விவசாயிகளிடம் வழங்கியுள்ளோம். அவர்களுக்கு நாம் உரமானியம் வழங்குகின்றோம். மற்றும் தேவையான வசதிகளை செய்து கொடுக்கின்றோம்.
இதுதான் எமது கொள்கை. நாட்டில் பிரச்சினை இருக்கின்றது. அதனை நாம் மறுக்கவில்லை. அதனால் எமக்கு துரித அபிவிருத்தி மிகவும் அவசியம். இதற்கு வலுவான பாராளுமன்றம் இன்றியமையாதது. கிராமத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியது உங்களது பொறுப்பு என்றார்.
இக்கூட்டத்தில் ஐ.ம.சு.மு.யின் களுத்துறை மாவட்ட அபேட்சகர்களான அமைச்சர்கள் குமார வெல்கம, மஹிந்த சமரசிங்க, டாக்டர் ராஜித சேனாரட்ன, ரோஹித அபேகுண வர்தன, நிர்மல கொத்தளாவல மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் டியூடர் தயாரட்ன, ஜயந்த ஜயவீர, அப்துல் காதர் மசூர் மெளலானா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply