கண்ணிகள் அகற்றும் பணியில் வடக்கில் இராணுவம் தீவிரம்

1100 இராணுவ பொறியியலாளர், 7 அரச சார்பற்ற நிறுவனங்கள் முழுமையாக ஈடுபாடு வடக்கில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகளை இராணுவத்தினர் துரிதமாக மேற்கொண்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். இடம்பெயர்ந்துள்ள மக்களை தமது சொந்த இடங்களில் வெகுவிரைவில் மீளக் குடியமர்த்தும் நோக்குடனேயே கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை இராணுவத்தினர் துரிதப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கென கண்ணிவெடிகளை அகற்றும் துறையில் நிபுணத்துவம் பெற்ற 1100 இராணுவ பொறியியலாளர்களும், 7 அரச சார்பற்ற நிறுவனங்களும் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தில் A-32 வீதியின் இரண்டு பக்கமும் காரைநகர் ஜெட்டி வரையும், A-9 வீதியின் இரண்டு பக்கமும் சுன்னதீவு முதல் ஆனையிறவு வரையான பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. கிளிநொச்சியில் ஆனையிறவு முதல் ஓமந்தை வரையான A-9 வீதியின் இருபக்கமும் A-35 வீதியின் இரு பக்கமும், பி- 69 வீதியின் இருபக்கமும் அகற்றப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள 25 கிராமங்கள் கண்ணிவெடி அகற்றுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் தற்போது முல்லைத்தீவின் ஒன்பது கிராமசேவகர் பிரிவுகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மன்னாரில் மாந்தை மேற்கின் 15 கிராம சேவகர் பிரிவுகள், மாந்தை கிழக்கின் 13 கிராம சேவகர் பிரிவுகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியிலுள்ள 18 கிராம சேவகர் பிரிவுகளில் அகற்றும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் சேமமடு கிராம சேவகர் பிரிவில் அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சுமார் 80 ஆயிரத்துக்கு உட்பட்ட எண்ணிக்கையிலானவர்களே மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், மீள்குடியேற்றத்தை
துரிதப்படுத்தும் நோக்குடன் படைவீரர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply