ததேகூ ஆயுதம் தங்கிய குழுவல்ல; ஜனநாயக அமைப்பு : அரியநேத்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆயுதம் தாங்கிய குழுவாக செயற்படவில்லை. அது ஜனநாயக ரீதியில் செயற்படுகின்ற அரசியல் கூட்டமைப்பாகும். எம்மைத் தடை செய்வதாக அரசாங்கம் கூறுமானால் அதன் அர்த்தம் என்ன? எமது ஜனநாயக போராட்டத்தை நாம் கைவிட்டு விடுவோம் என்று எவரும் எண்ணக்கூடாது என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னால் தமிழ் மக்களின் அலை திரண்டு கொண்டிருக்கின்றது. எம்மைப் பொறுத்தவரையில் நாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் எமது சமூகத்தை விட்டுக் கொடுப்பதற்குத் தயாரில்லை.

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் விடிவு, சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்காக ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இருந்தும் அது தோல்வி கண்டுள்ளது.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் நாம் எமது சமூகத்தின் விடிவுக்காகவும் உரிமைக்காகவும் ஜனநாயக ரீதியில் அரசியல் கட்டமைப்பினூடாக போராடி வருகின்றோம்.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்பதனால் எமது ஜனநாயக நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு எவருக்கும் அருகதையில்லை. இவ்வாறான நிலையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் என்ற குறுகிய எண்ணம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இது சாதாரணமாகப் பார்க்கக்கூடிய விடயமல்ல. பாரதூரமான விடயமாகும். அரசாங்கம் என்ற வகையில் ஜனநாயக ரீதியில் செயற்பட்டு வருகின்ற அரசியல் சார்ந்த அமைப்பைத் தடை செய்வது எவ்வாறு சாத்தியமாகும்?

தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ்கின்றது. இந்நிலையில், அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேறுமாக இருந்தால் அல்லது அவ்வாறு எண்ணத் தோன்றுமாக இருந்தால் தமிழ் மக்களுக்கான குரலை நசுக்குவதற்கான நடவடிக்கையாகவே அது அமையும்.

அத்துடன், இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு என்று எதுவும் இல்லை என்ற நிலையை உருவாக்குவதும் அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது.

அரசாங்கம் என்னதான் கோஷமிட்டாலும் தமிழ் மக்களுக்கான குரலாக விளங்குகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை எவரும் கட்டுப்படுத்த முடியாது. அதனை நாம் கைவிடப் போவதுமில்லை.

காரணம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆயுதம் ஏந்திப் போராடவில்லை என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்”என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply