பிரிட்டன் அரசியல் கட்சிகள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் மக்கள் கட்சி நீக்கம்
பிரிட்டனில் விடுதலைப் புலிகள் மக்கள் கட்சி என பதிவு செய்யப்பட்டிருந்த அரசியல் கட்சியை அந்நாட்டு தேர்தல் ஆணையகம் தேர்தல் இடாப்பிலிருந்து நீக்கியுள்ளது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி என்ற இக்கட்சி கொண்டுள்ள தொடர்புகளை விசாரணைகளை மேற் கொண்டிவரும் தேர்தல் ஆணையகம் தேர்தல் இடாப்பிலிருந்தும் இக்கட்சியை தற்காலிகமாக நீக்கியுள்ளது.
பிரிட்டனில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், பயங்கரவாத இயக்கமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள போதிலும் அங்கு நடைபெற இருக்கும் உள்ளூர் மற்றும் தேசிய தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு இக்கட்சியின் குழுத்தலைவர் 69 வயதான நடராஜா பாலசுப்பிரமணியம் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தம்மை பாலா என்று அறிமுகம் செய்து கொண்ட பாலசுப்பிரமணியம், லண்டன் குறெய்டன் கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், விடுதலைப்புலிகள் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்துவதை நியாயப்படுத்தி பேசினார்.
லண்டன், தோண்டன் ஹீத்தில் முன்னர் தபால் அலுவலக எழுதுவினைஞராக பணியாற்றிய பாலசுப்பிரமணியம், பியூவேர்ளிவே என்ற இடத்தில் 24 மணிநேர பாதுகாப்பு இருப்பதால் அங்கு தமது கட்சியின் தலைமை அலுவலகத்தை அமைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
விவாதங்களை நடத்துவதன் மூலம், இலங்கை படையினர் கடந்த வருடம் விடுதலைப்புலிகளை அழித்த போது இடம் பெற்ற இக்கொலைகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும் என்று பாலசுப்பிரமணியம் நம்பிக்கை தெரிவித்தார். நியாயவாதங்கள் அனைத்தும் தங்களுக்கு சாதகமாக இருக்கின்றன என்று தெரிவித்த பாலசுப்பிரமணியம், விடுதலைப்புலிகள் உண்மையான விடுதலைப் போராளிகள் என்றும் அவர்களை பயங்கரவாதிகள் என்று நாமம் சூட்டுவது தவறு என்றும் கூறினார்.
பாலசுப்பிரமணியம் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தாம் 15 வயதிலிருந்து இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு தனி நாடு கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்குகொண்டிருந்ததாக கூறினார். ஆனால் தாம் ஒரு குண்டையேனும் வீசவில்லை என்றும் வன்முறையில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்தார். தேர்தலில் ஆசனங்களை கைப்பற்றுவோமா என்பது பற்றி தமக்கு தெரியாது என்று குறிப்பிட்ட அவர், ஆனால் இதன் மூலம் தங்கள் செய்தியை அனைவருக்கும் பரப்ப முடியும் என்று கூறினார்.
விடுதலைப்புலிகள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். சிறுவர்களை துப்பாக்கிகளுடன் காண்பித்துள்ள படங்கள் வெறும் பிரசாரமே என்றும் அவர் கூறினார். சிறுவர்கள் தாமாகவே முன்வந்து புலிகளுடன் இணைந்து கொண்டனர். ஆனால் அவர்களுக்கு சிறிது கல்வியறிவு ஊட்டப்பட்டது என்று பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
பிரிட்டனில் அரசியல் கட்சிகளை தேர்தல் இடாப்பில் பதிந்து கொள்வதற்கு பொறுப்பான தேர்தல் ஆணையகத்தின் பேச்சாளர் ஒருவர், இந்த வருடம் பெப்ரவரி மாதம் 10 ம் திகதி இக்கட்சி தேர்தல் அலுவலகத்தில் ஒரு அரசியல் கட்சியாக பதிவுசெய்து கொண்டது என்று கூறினார்.
இக்கட்சி, தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புள்ளது என்று கட்சியின் தலைவர் தெரிவித்ததாக பத்திரிகை செய்திகளிலிருந்து தாங்கள் அறிய வந்ததாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
தற்போது கட்சிக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்ததுடன் தற்காலிகமாக கட்சியை தேர்தல் அலுவலக இடாப்பிலிருந்து நீக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply