கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை நோக்கி இராணுவம் முன்னேற்றம்
வடக்கே, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாகிய வன்னிப்பகுதியில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக 7 படையணிகள் பல முனைகளில் தாக்குதல்களை நடத்திய வண்ணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை நோக்கி முன்னேறி வருவதாகவும், கடந்த இரு தினங்களில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் சண்டைகளில் விடுதலைப் புலிகளின் 14 சடலங்களைப் படையினர் ஆயுதங்களுடன் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.
பரந்தனுக்கு மேற்குப் பகுதி, அடம்பன், இரணைமடுவுக்கு மேற்குப்புறம், திருமுறிகண்டி, கொக்காவில், கனகராயன்குளம், புளியங்குளம், ஒலு மடுவின் வடகிழக்குப் பகுதி மற்றும் அலம்பில் ஆகிய முனைகளில் இருந்து அரச படையணிகள் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இங்கு இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
வவுனியா நகருக்கு வடக்கே அமைந்துள்ள ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் இருந்து ஏ9 வீதியில் இராணுவம் கிளிநொச்சி நகருக்குத் தெற்கே உள்ள கொக்காவில் வரையிலான பெரும் பகுதியைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.
எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் இந்த மோதல்கள் காரணமாக யுத்த பிரதேசத்திலிருந்து இதுவரையில் 225 குடும்பங்களைச் சேர்ந்த 654 பேர் இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் யாழ் மாவட்டங்களில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு வந்துள்ளதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply