இந்தியத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த சிவாஜிலிங்கம் முடிவு

இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்தியாவுக்குள் பிரவேசிப்பதற்கு தமக்கு அனுமதி மறுக்கப்பட்டமைக்கு எதிராகவே இவ் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டு சென்னை விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், புதன்கிழமை இரவு பத்தரை மணியளவில் கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை மாலை 3.05 மணியளவில் கிங் ஃபிஷர் எனப்படும் தனியாருக்குச் சொந்தமான விமானத்தில் கொழும்பிலிருந்து புறப்பட்ட தாம் 4.40 மணியளவில் சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தாகவும், சுமார் நான்கு மணித்தியாலங்கள் தமக்கு சென்னை விமான நிலையத்தில் தரித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மாலை 5.00மணியளவில் சென்னை விமான நிலையத்தில் குடிவரவு,குடியகல்வு அதிகாரிகள் தம்மை இந்தியாவுக்குள் பிரவேசிக்க முடியாது எனக்கூறினர். அதற்குரிய காரணத்தை நான் வினவியபொழுது தமக்கு இடப்பட்ட உத்தரவு என்றும், தம்மால் எதுவும் கூற முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். எதுவாக இருப்பினும் புது டில்லியில் உள்ள உள்துறை அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டனர். பின்னர் 9.15 மணியளவில் என்னை ஏயர் லங்கா விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட்டனர்” என்றார்.

எதிர்வரும் 21 ஆம் திகதிவரை தாம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதாகவும்,அந்த அடிப்படையிலேயே தமது பயணத்தை மருத்துவ பரிசோதனையின் நிமித்தம் மேற்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார். எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை செல்லுபடியான சார்க் நாடுகளுக்குச் செல்லும் பயணச் சீட்டை தமது கடவுச் சீட்டில் இணைத்துள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply