அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை புதன் சுபநேரத்தில் பதவிப் பிரமாணம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை எதிர்வரும் 21 ஆம் திகதி சுபநேரத்தில் பதவிப்பிரமாணம் செய்யும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏழாவது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்து கொள்வதற்காக கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் 158 தொகுதிகளின் பெறுபேறுகள் மட்டுமே வெளியாகின. இந்நிலையில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள நாவலப்பிட்டி மற்றும் திருகோணமலை தேர்தல் தொகுதிகளின் மறு வாக்குப்பதிவு எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது.

அந்த இரு தொகுதிகளினதும் முடிவுகள் வெளியானதும் ஏழாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் 21 ஆம் திகதி வெளியிடப்பட்டதன் பின்னரே புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்படவிருக்கின்றது.

ஆளும் தரப்பைச் சேர்ந்த அமைச்சர்களில் பலர் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளமையினால் புதிய அமைச்சரவையில் முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவிருப்பதாகவும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் சகல மாவட்டங்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில் வலயங்களாகப் பிரித்து அவற்றுக்குப் பொறுப்பான அமைச்சுக்களும் நியமிக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெளிவிவகார, கல்வி, சுகாதார மற்றும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் ஆளும் தரப்பில் வெற்றியீட்டிய புது முகங்களுக்கு சேவை செய்யக் கூடிய வகையில் பிரதி அமைச்சு அல்லது வலயங்களுக்குப் பொறுப்பான அமைச்சுப் பதவிகளில் சிலவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருக்கின்றது. அது மட்டுமன்றி, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்குரிய அதிகாரங்கள் கொண்ட செயலாளர்களே அமைச்சுக்களின் செயலாளர்களாக நியமிக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, நாடாளுமன்றத்திற்குப் புதிதாக தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் நன்மை கருதி அமைக்கப்பட்டுள்ள தகவல் கரும பீடம் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இயங்கவுள்ளது. ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரின் முதலாவது அமர்வை நடத்துவதற்கு வசதியாக மூன்று நாட்களும் நடத்தப்படவிருக்கின்ற தகவல் கரும பீடம் காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 3.00 மணிவரை இயங்கவுள்ளது என சட்டவாக்கச் சேவைகள் திணைக்களத்தின் சபை ஆவண அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்கள் மற்றும் முக்கியமான ஆவணங்களை இந்த பீடத்தில் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் புதிய உறுப்பினர்கள் தங்களுடைய அடையாள அட்டையை கொண்டு வருமாறும் பிரதான நுழைவாயிலை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் 22 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply