கொழும்பு-ஐரோப்பிய விமான சேவைகள் பல இரத்து
ஐஸ்லாந்தில் வெடித்த எரிமலை கக்கிய புகை மண்டலம் வான்பரப்பில் பரவியதையடுத்து ஐரோப்பிய நாடுகளில் சுமார் 17ஆயிரம் விமான சேவைகளைச் இரத்துச் செய்துள்ளதாக ஐரோப்பிய விமான சேவை கட்டுப்பாட்டு அமைப்பான யூரொகண்ட்ரோல் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக லண்டன் மற்றும் ஏனைய ஐரோப்பிய நகரங்களுக்கு கொழும்பிலிருந்து இயக்கப்படும் பல விமான சேவைகள் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளோர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருவதற்கு முன்னராக தமது பயண ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு விமான சேவை குறித்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஐரோப்பியாவில் பரவியுள்ள புகைமண்டலம் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதக் காரணமாகவே இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, நேற்றுப் புறப்படவிருந்த இருவிமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய சேவைகள் முகாமையாளர் ரொஷானி மாசகோரல தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை 2.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த இலண்டனுக்கான விமான சேவையும் நேற்றுப் பகல் 1.15 இற்குப் புறப்படவிருந்த மேலுமொரு இலண்டனுக்கான விமான சேவையுமே இரத்துச் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இது தவிர பிராங்போர்டுக்கான விமான சேவையை ரூமேனியா வரையிலேயே நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், பயணிகள் தாம் பயணிக்கவிருக்கும் விமானம் தொடர்பான தகவல்களை 091 7335500 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அயர்லாந்து, பிரிட்டன், பெல்ஜியம்,நெதர்லாந்து, டென்மார்க், சுவீடன், நோர்வே, பின்லாந்து, எஸ்டோனியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாத்திரம் 17 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக ஐரோப்பிய விமானசேவை கட்டுப்பாட்டு அமைப்பான யுரோகன்ட்ரோல் தெரிவித்துள்ளது.
சுகாதார அபாயங்கள் ஏற்பட வாய்ப்பில்லை
ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை கக்குகின்ற சாம்பல் புகையால் ஏற்படக்கூடிய சுகாதார அபாயங்கள் குறித்து முழுமையாக அறியமுடியவில்லையென கூறியுள்ள ஐக்கிய நாடுகளின் சுகாதார ஸ்தாபனம், அந்த சாம்பல் துகள்கள், குறிப்பாக ஆஸ்மா மற்றும் ஏனைய சுவாசப் நோய்கள் இருப்பவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளது.
எய்யப்யாலயேகோட்லஎன்ற எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து அது கக்கிக்கொண்டிருக்கும் புகையிலுள்ள சாம்பல் துகள்களில் 25 வீதமானவை நிறையில் 10 மைக்ரோனுக்கும் குறைவானவை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சாம்பல் கலந்த புகை மிக செறிவாக வளிமண்டலத்தின் தாழ்வான பகுதிக்கு இறங்குமானால் இந்த சுவாசப் பிரச்சனைகள் அதிகரிக்கும் எனவும் ஆனால் அது வளிமண்டலத்தின் உயர்வான பகுதியில் தங்கியிருக்கும் வரை அவ்வாறான சுகாதார அபாயங்கள் ஏற்பட வாய்ப்பில்லையனவும் சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது.
தற்போதைக்கு ஆபத்தில்லை
காற்று வீசும் திசைக்கும் அதன் வேகத்துக்கும் ஏற்ப இந்தப் புகை மேகத்தின் செறிவு நாட்டுக்கு நாடு வேறுபடும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பொதுச்சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரிவின் பணிப்பாளர் மரியா நெய்ரா கூறுகிறார்.
எரிமலை கக்கியுள்ள சாம்பல் கலந்த புகை தற்போதைக்கு வளிமண்டலத்தின் உயர்வான பகுதியிலேயே தங்கியிருப்பதாகவும் அது இன்னும் கீழ்மட்டத்துக்கு இறங்கத் தொடங்கவில்லையெனவும் ஐ.நா கூறியுள்ளது.
ஏதாவது சுவாச நோய்களுடன் தொடர்புடைய அறிகுறிகள் தென்படுமானால் மக்கள் வெளியில் செல்வதை கூடுமானவரை தவிர்த்து வீடுகளுக்குள்ளேயே தங்கியிருப்பதே பொருத்தமானதென சுகாதார நிபுணர்கள் கருத்துவெளியிட்டுள்ளனர்.
இயற்கை சூழலை பாதிக்கும் ஏனைய வாயுக்களைப் போலவே இந்த எரிமலைப்புகையிலிருந்து வெளியேறும் துகள்களும் கடுமையான சுற்றுச்சு??ழல் அபாயத்தை விளைவிக்கக்கூடியவை.
ஆகாய போக்குவரத்தில் தொடரும் தடை
நிறைகூடிய சாம்பல் துகள்கள் எரிமலையை அண்டிய பகுதிகளிலேயே தங்கிவிடக்கூடியதென்கின்ற போதிலும் மிக நிறைகுறைந்த துகள்களே பூமிக்கு இறங்குவதற்கு முன்னர் நீண்டதூரம் காற்றோடு அள்ளுண்டு செல்வதாக ஐக்கிய நாடுகளின் உலக வானிலை ஆராச்சி மையம் கூறியுள்ளது.
இதற்கிடையே, இந்த எரிமலை சாம்பல் கலந்த புகைப்படிமங்கள், பல ஐரோப்பிய நாடுகளின் ஆகாய போக்குவரத்து மார்க்கங்களை மூடச்செய்துள்ளதுடன் இதன் விளைவாக விமான சேவை நிறுவனங்களும் பணிகளை தொடர்ந்தும் இடைநிறுத்தி வைத்துள்ளன.
பல ஐரோப்பிய நாடுகளில் விமான பறப்பு தடை அமுலில் உள்ளது.ஜேர்மனி, போலந்து, ஆஸ்திரியா மற்றும் லித்துவேனியா போன்ற நாடுகளில் பல பகுதிகள் விமான பறப்புத் தடை வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக அத்லாண்டிக் தொடங்கி ரஷ்ய எல்லை வரையும் அல்ப் தொடங்கி ஆர்ட்டிக் வரையுமான ஆகாய போக்குவரத்து மார்க்கங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன.
இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும்
குறித்த எரிமலையை அண்டிய பகுதிக்கு பயணித்து அதன் நிலைமைகளை கண்காணித்துள்ள ஐஸ்லாந்து வானிலை மையத்தின் உறைபனி ஏரி தொடர்பான ஆராச்சியாளர் டாக்டர் மெத்தீவ் ராபர்ட்ஸ், இந்த எரிமலை கக்குவது இன்னும் சில நாடுகளுக்கு நீடிக்கும் எனவும் ஆனால் தற்போது குறைந்தளவான சாம்பல் புகையையே எரிமலை கக்கிக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு இவ்வாறான நிலைமையே தொடர்ந்தும் நீடிக்குமானால் உள்ளுõரில் மட்டுமே அதிக பாதிப்புகள் ஏற்படலாம் என கூறியுள்ள டாக்டர் மெத்தீவ் ராபர்ட்ஸ், சர்வதேச ஆகாய போக்குவரத்தில் குறைந்தளவான அச்சுறுத்தலையே எதிர்பார்க்கமுடியும் என சுட்டிக்காட்டினார்.
ஆசிய நாடுகளிலிருந்த ஐரோப்பாவுக்குச் செல்லும் விமானங்களுக்கு பிரதான நாடாக சிங்கப்பூர் திகழ்வதால் சிங்கப்பூரில் தற்போது ஹோட்டல்கள் விமானப் பயணிகளால் நிரம்பி வழிவதாகவும் தெரிவித்துள்ள் பி.பி.ஸி, இந்த விமானப் போக்குவரத்துத் தடை காரணமாக விமான சேவை நிறுவனங்களுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply