தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து கூட்டமைப்புடனும் பேசத் தயார் : டக்ளஸ் தேவானந்தா
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தமிழ்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு ஐக்கியப்பாட்டுடன் செயற்படுவதன் அவசியம் இன்று உணரப்பட்டுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தான் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமையுடனும் பேசவுள்ளேன். அவர்களுடனும் ஏனையோருடனும் பேசி ஒரு பொதுவான இணக்கப்பாட்டுக்கு வரவே தாம் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் அபிவிருத்தி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேற்று அவரது முன்னைய அமைச்சான சமூக சேவைகள், சமூக நலன்புரி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
தென்னிலங்கைச் சிங்களவர்களுக்கான சுதந்திரம் தங்கத் தட்டாகவும் வடக்கு,கிழக்குத் தமிழர்களின் சுதந்திரம் தகரத் தட்டாகவும் இருக்கக் கூடாது. அதனை அனுமதிக்கவும் முடியாது. ஆகவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
தேவையற்ற யுத்தத்தின் ஊடாக எமது மக்கள் இழந்த அனைத்தினையும் மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அண்மையில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை நான் வரவேற்கிறேன். அவர் தற்போது யதார்த்த நிலையை புரிந்து கொண்டுள்ளார். அது நல்லதொரு மாற்றம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்று தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டுமென்ற நிலைப்பாட்டிலுள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும். நாம் அனைவரும் ஓரணியாக திரள வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு முதலில் எங்கோ ஒரு மூலையிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். இதன் ஆரம்பமாகத்தான் நாம் 13 வது திருத்தச் சட்ட மூலத்தைப் பார்க்கிறோம். இதனை ஒரு நடைமுறைச் சாத்தியமான, கௌரவமான தீர்வுத் திட்டத்தின் ஆரம்பமாக நாம் கொள்ள முடியும். 13வது திருத்தச் சட்ட மூலம் என்பது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. இது எமது அரசியலமைப்பிலும் உள்வாங்கப்பட்டுள்ளது. தற்போது அது தென்னிலங்கையிலும் கிழக்கு மாகாணத்திலும் நடைமுறையிலுள்ளது. ஆகவே, இதிலிருந்தே எமது பணிகளை ஆரம்பிக்க முடியும்.
இதன் காரணமாக, நான் அனைத்துத் தமிழ்க் கட்சிகளுடனும் பேசத் தயாராகவுள்ளேன். தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுடன் மட்டுமின்றி, தோல்வியடைந்த கட்சிகள், அங்கீகக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும் விரைவில் நான் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.
நாம் இந்த விடயத்தில் ஐக்கியப்பட்டுச் செயற்படாவிட்டால், எமது பிரச்சினைகளை நாம் தீர்த்துக் கொள்வதற்கு ஒன்றிணைந்து செயற்படத் தயாராகவில்லையென்ற செய்தியையே அது தென்னிலங்கைக்கு எடுத்துக் கூறும். நமது பலவீனப்பட்ட நிலையையே அது எடுத்துக் காட்டும். அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது.
தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு நிலைப்பாட்டினையும் இலக்கினையும் கொண்டவையாக இருக்கலாம். அவை சமஷ்டியாக இருக்கலாம், சுய உரிமையாக இருக்கலாம், ஒரு நாடு இரு தேசங்கள் என்ற கொள்கையாக இருக்கலாம. அல்லது இந்திய மாதிரியைக் கொண்டதாக இருக்கலாம். ஆனால், அதற்கான முன்முயற்சிகள் ஏதாவது ஓரிடத்திலிருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளது. ஆகவே, அதனை 13 வது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஆரம்பிக்கலாமென நாம் நிச்சயமாக நம்புகிறோம். ஆனால் அது ஒரு முடிவாக இருக்க முடியாது.
இதனை அனைவரும் இன்று உணர்ந்துள்ளதாகவே நம்புகிறேன். ஆகவே, அரசியல் வேறுபாடுகளை மறந்து எமது மக்களின் நலன்களையும் அவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு செயற்படவேண்டும். என குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply