குற்றச்செயல்களை ஒழிப்பதன் மூலமே நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டலாம்

பயங்கரவாதத்துடன் உருவெடுத்த குற்றச் செயல்களை முற்றாக ஒழிப்பதன் மூலமே நாட்டில் சமாதானத்தை நிலை நாட்டி இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த முடியும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாதத்துடன் உருவான பாதாள உலக கோஷ்டிகளின் செயற்பாடுகள், குற்றச் செயல்கள் மற்றும் போதை பொருள் கடத்தல் போன்ற நடவடிக்கைகளை இல்லாதொழிக்க பொலிஸாரின் பங்களிப்பு மிக முக்கியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது பொலிஸ் அகடமியை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் வைபவம் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்புச் செய லாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேலும் உரையாற்றுகையில்,

மூன்று தசாப்தங்களாக இந்த நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் செயற்பாடுகளில் முப்படையினர் முழுமையாக ஈடுபட்டிருந்த அதேசமயம் அவர்களுக்குத் தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் பொலிஸார் வழங்கி வந்தனர்.

நாட்டில் நிரந்தர சமாதானம் நிலவ பொலிஸாரின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. அதற்கு பொருத்தமான பொலிஸாரை உருவாக்குவது காலத்தின் கட்டாய தேவையாகும்.

உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி அந்த நாடு தொடர்பான சிறந்த பிரதி பலிப்பை அந்தந்த நாட்டின் பொலிஸாரின் மூலமே காண்பிக்க முடியும். அதனால் பொலிஸார் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என்றும் பாதுகாப்புச் செயலாளர் வேண்டுகோள் விடுத்தார்.

சமூகம் விரும்பும் சேவையை பொலிஸார் வழங்க வேண்டும். அதே சமயம் சமூகத்தின் மத்தியில் கெளரவத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் பொலிஸார் தமது சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பொலிஸாருக்கு துறைசார் பயிற்சிகளும் கற்கைகளும் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்குவதன் மூலமே அவர்களிடமிருந்து சிறந்த சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும். இதனை நோக்கமாகக் கொண்டே இந்த பொலிஸ் அகடமி உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

சிறந்த பயிற்சிகளை பெற்று தமது திறமைகளை வெளிக்காட்டும், அமுல்படுத்தும் பொலிஸாருக்கு மேலதிக பயிற்சிகளை வெளிநாடுகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். யுத்தம் நிலவிய காலகட்டத்தில் பொலிஸாருக்கு தேவையான பயிற்சிகள் வழங்க முடியாமல் போனது. தற்பொழுது வழங்கப்படும் வாய்ப்புக்களை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply