முல்லைத்தீவைக் கைப்பற்ற இன்னும் 7 கிலோ மீற்றர்களே: பாதுகாப்பு அமைச்சு

விடுதலைப் புலிகளின் தலைமையகம் அமைந்திருக்கும் கிளிநொச்சியைக் கைப்பற்ற முன்னேறிவரும் இராணுவத்தினர், முல்லைத்தீவைக் கைப்பற்றுவதற்கு இன்னமும் 7 கிலோ மீற்றர் தூரமே எஞ்சியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 
 
இராணுவத்தினர் முல்லைத்தீவு-அலம்பில் வீதியின் வடபகுதி ஊடாக ஏற்கனவே 3 கிலோ மீற்றர் தூரம் முன்னேறிச் சென்றுள்ளனர். முல்லைத்தீவிலிருந்து 7 கிலோ மீற்றர் தொலைவிலிருக்கும் படையினர் தமது நிலைகளைப் பலப்படுத்தியுள்ளனர்” என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அலம்பில் வடக்கு பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் குழுக்களை இலக்குவைத்து இராணுவத்தினரின் 59வது படைப்பிரிவு பல்வேறு தாக்குதல்களை நடத்தியிருப்பதுடன், விடுதலைப் புலிகளின் பலம்மிக்க பகுதியான நெடுங்கேணியை நோக்கி முன்னேறி வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.

அத்துடன், கிளிநொச்சி நகரைக் கைப்பற்றும் நோக்கில் ஏ-9 வீதியில் கனகராயன் பகுதியில் இராணுவத்தினர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முள்ளியவளையில் கிளேமோர் தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளைப் பகுதியில் கிளேமோர் தாக்குதல் சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. இதில் தாய், மகன் உட்பட மூவர் உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பொதுமக்களே இந்தக் கிளேமோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் படையணியே இந்தத் தாக்குதலை நடத்தியதாக விடுதலைப் புலிகள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முல்லைத்தீவிலிருந்து ஏழு கிலோமீற்றர் தொலைவு தூரத்திலேயே இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ள நிலையில் இந்தக் கிளேமோர் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply