விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதியாக வாழ்ந்த இல்லத்திற்கு நபர் ஒருவர் உரிமை கோரியுள்ளார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதியாக வாழ்ந்த இல்லத்திற்கு நபர் ஒருவர் உரிமை கோரியுள்ளதாக இராணுவுத்தினர் தகவல் வெளியிட்டுள்னர். வவுனியா அகதி முகாமில் தங்கியிருக்கும் நபர் ஒருவரே இவ்வாறு குறித்த வீட்டுக்கு உரிமை கோரியுள்ளார்.கிளிநொச்சி, விஸ்வமடு தர்மபுரத்தில் அமைந்துள்ள குறித்த இல்லம் தமது உடமை எனவும், குறித்த இல்லத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாக சுவீகரித்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
எட்டு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தமது வீட்டை பலவந்தமாக கைப்பற்றியாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு ஏக்கரில் அமைந்துள்ள குறித்த இல்லத்தைச் சுற்றி பாரிய பதுங்கு குழிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரபாகரன் இறுதியாக வாழ்ந்த இல்லம் குறித்த நபருக்கு சொந்தமானது என பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
 
குறித்த மெய்ப்பாதுகாவலர் தற்போது இராணுவத்தின் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும், குறித்த இல்லம் பணம் கொடுத்து கொள்வனவு செய்யப்பட்டது எனவும், பலவந்தமாக கைப்பற்றப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
பயங்கரவாத அமைப்பு உறுப்பினர் ஒருவருக்கு சொத்துக்களை விற்பனை செய்வது சட்டத்திற்கு முரணானதென இராணுவத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த நபரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பொதுமக்களது வீடுகள் விரைவில் உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply