புலிகளுக்கு உயிர்கொடுப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் : பிரதமர்

“இலங்கையில் கடந்த வருடம் அழித்தொழிக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் உயிர்கொடுப்பதற்கென உங்கள் மண்ணை பயன்படுத்தும் தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்” என பிரதமர் டி.எம். ஜயரத்ன மேற்கு நாடுகளிடம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் .

வெளிநாடுகளில் வசித்துவரும் சுமார் 15 லட்சம் புலம்பெயர் தமிழ் மக்கள் இலங்கையில் தங்கள் சமூகத்தினருக்கென சுதந்திர தாயகம் ஒன்றை உருவாக்குவதற்காக பிரிவினைப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கென இயக்கமொன்றை ஏற்படுத்திக் கொள்ள திட்டமிட்டு வருகிறார்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

“அவர்கள் எமக்கு எதிராக எழுவதைத் தடுப்பதற்கு மேற்கு நாடுகள் போதிய நடவடிக்கைகளை எடுப்பதாக இல்லை” என்றும் பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்கத்துடன் கொழும்பில் நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலுள்ள விடுதலைப்புலிகள் அனுதாபிகள் எதிர்வரும் 17ஆம் திகதி தொடக்கம் சுவிற்ஸர்லாந்தில் மூன்று நாள் நிதிசேகரிப்பு இயக்கம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார். புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொள்ள இருக்கும் இந்த நிதி சேகரிப்பு இயக்கம் பற்றி பிரதமர் விரிவாக எதுவும் கூறவில்லை.

மேலும் அவர் கூறுகையில்,

“மற்றுமொரு நாட்டுக்கெதிராக எவரும் எமது மண்ணை பயன்படுத்த நாம் அனுமதி அளிக்க மாட்டோம். மேற்கு நாடுகள் இலங்கைக்கு விரோதமான நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தடுப்பதற்கு ஆவன செய்வதில்லை என்று நான் கருதுகின்றேன். மேற்கு நாடுகள் அத்தகையோருக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்களவர்களைப் பெரும்பான்மையாக கொண்ட இந்தத் தீவில் தமிழர் தாயகம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக 37 வருடங்களாக போராடிவந்த தீவிரவாத தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இலங்கை படையினர் கடந்த வருடம் மே மாதம் கொன்றனர்.

1983ஆம் ஆண்டிலிருந்து அமுல் செய்யப்பட்டுவரும் அவசரகால சட்ட பிரமாணங்கள் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு நிலைமை சீரடைந்து வருவதால் எதிர்வரும் மாதங்களில் படிப்படியாக தளர்த்தப்படும். எவ்வாறாயினும், வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குப் புத்துயிர் அளித்து இலங்கையில் செயலிழந்திருக்கும் தீவிரவாதிகளை மீண்டும் செயற்பட வைப்பதற்கு திட்டமிட்டு வருகிறார்கள் என்றும் பிரதமர் குற்றஞ்சாட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply