இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுவது போல் ஒருசில அரசியல் வாதிகள் நடிக்கிறார்கள்: கருணாநிதி

ஒருசில அரசியல் வாதிகள் அரசியல் ரீதியான உள்நோக்கங்களோடு, ஏதோ அவர்கள் தான் இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுபவர்களைப் போல நடிக்கிறார்களே என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழகதில் இருந்து வெளிவரும் ஆங்கில நாள் ஏடுகளுக்கு அளித்த நேர் காணல் .

கே :‐ இலங்கைத் தமிழர் பிரச்சினை ஒரு துயரமான முடிவுக்கு வந்திருக்கிறது. அந்நாட்டில் போர் முடிந்து, இரு தேர்தல்கள் நடந்துள்ள நிலையிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவும் அரசியல் தீர்வு ஏற்படவும் இந்தியாவின் நடவடிக்கைகளில் மெத்தனமும் அலட்சியமும் தென்படுகின்றனவே?

ப :‐ இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் ‐ அங்குள்ள தமிழர்கள் எல்லாம் அமைதியான நல்வாழ்வு வாழ வேண்டும் ‐ அவர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது தான் இங்குள்ள மத்திய, மாநில அரசுகளின் பெரு விருப்பமாகும். இலங்கை ஒரு அன்னிய நாடு என்கிற போது தான், அவர்களின் உள்நாட்டுப் பிரச்சினைகளில் நாம் தலையிடும்போது முள்ளில் விழுந்த துணியை, கிழியாமல் எடுப்பது போல் எடுக்க வேண்டியிருக்கின்றது. அந்த அளவிற்கு மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே, இங்குள்ள ஒருசில அரசியல் வாதிகள் அரசியல் ரீதியான உள்நோக்கங்களோடு, ஏதோ அவர்கள் தான் இலங்கைத் தமிழர்களுக்காகப்பாடுபடு பவர்களைப் போல நடிக்கிறார்களே தவிர, வேறொன்றும் இல்லை. உதாரணமாக பார்வதி அம்மாள் பிரச்சினையையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலை. இருந்தாலும் ஒருசிலர் தங்களின் அரசியல் அபிலாசைகளுக்காக அந்த அம்மையாரின் உடல் நிலையை வைத்து தாங்கள் தான் அவர்மீது அக்கறையும், பாசமும், பற்றும் உள்ளவர்கள் என்பதைப்போல திட்டமிட்டு எல்லோ ரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கே:‐ இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததும் காங்கிரசிடம் ஒரு கர்வமும் ‐ பெரிய அண்ணன் போக்கில் நடந்து கொள்வதாகவும் டெல்லி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் அன்னையார் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில்கூட தமிழக அரசோடு கலந்தாலோசிக்கவில்லை என்று தி.மு.க. குற்றம்சாட்டி இருக்கிறது. தி.மு.க. காங்கிரஸ் உறவு எப்படி இருக்கிறது? 2011 தேர்தலில் இந்த உறவு நீடிக்குமா?

ப:‐ இது ஏதோ உள்நோக்கத்தோடு கேட்கப்படுகின்ற கேள்வியைப் போல உள்ளது. இருந்தாலும் பதில் கூறுகிறேன். காங்கிரசிடம் எந்தக் கர்வமும் ஏற்படவும் இல்லை. பெரிய அண்ணன் போக்கில் அவர்கள் நடந்து கொள்ளவும் இல்லை. இவை வெறும் கற்பனை. அண்மையில் நான் டெல்லி சென்றிருந்த போது கூட, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மிகுந்த அன்போடு என்னை வரவேற்றார்கள். பிரபாகரனின் அன்னையார் விவகாரத்தில் கூட தமிழக அரசோடு மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என்று தி.மு.க. தரப்பில் யாரும் குற்றஞ்சாட்டவில்லை. பிரபாகரனின் அன்னையார் தரப்பிலிருந்து தான் யாரும் தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் நீங்கள் வேண்டுமென்றே அனைத்தையும் மாற்றி கேள்வி கேட்டிருக்கிறீர்கள். தி.மு.க. காங்கிரஸ் உறவு சுமூகமாக உள்ளது. 2011 தேர்தலிலும் இந்த உறவு நல்லவிதமாக நீடிக்கும்.

கே:‐ தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படும் நிலைமை தொடர்கிறதே?

ப:‐ இந்தத் துன்பத்தைகளைவதற்கு பல ஆண்டுகளாக நம்மால் முடிந்த முயற்சிகளையெல்லாம் செய்து கொண்டு தான் வருகிறோம். எனினும் மீண்டும், மீண்டும் அந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இவ்வாறு முதல்‐அமைச்சர் கருணாநிதி கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply