முறிகண்டியில் இராணுவ முகாம்? : விநாயகமூர்த்தி முரளிதரன்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக தனியார் காணிகள் கையகப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் மீள்குடியேற்றத்துக்காக அனுப்பப்பட்ட மக்கள் அங்கு குடியேற்றப்படவில்லை என்றும் அந்தப் பகுதி இராணுவத்தினரால் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தனக்கு முறைப்பாடு வந்துள்ளதாக இலங்கை அரசின் மீள்குடியேற்றத்துறையின் துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்  தெரிவித்தார்.

இதன் காரணமாக மக்கள் சலிப்படைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். முறிகண்டிப் பகுதியில் சாந்தபுரம் என்கிற பிரதேசத்திலேயே இப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார். அந்தப் பகுதியில் “அரச காணிகள் இருக்கும் நிலையில், இராணுவத்தின் தேவைகளுக்கு தனியார் காணிகளை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தான் கருதுவதாகவும் அமைச்சர் முரளிதரன் கூறுகிறார்.

இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்புச் செயலர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் தான் பேசவிருப்பதாகவும் அவர்  தெரிவித்தார். எனினும் இதுவரை சர்ச்சைக்குரிய இந்த விடயம் தொடர்பில், இராணுவத்துக்கு காணிகள் ஏதும் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“முகாம்களுக்கே காணிகள்”

முறிகண்டிப் பகுதியில் இராணுவ முகாம்கள் அமைபப்தற்காகவே இந்தக் காணிகள் எடுக்கப்படுகின்றன என்று தனக்கு வந்த தகவல்களின் ஊடாக அறிந்து கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த விடயம் குறித்து மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்று கூறும் துணை அமைச்சர், எதிர்வரும் திங்கட்கிழமை தானும் மூத்த அமைச்சரான மில்ராய் பெர்ணாண்டோவும் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.

“அபிவிருத்திகளுக்காக தனியார் காணிகளை எடுப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது” என்றாலும், இராணுவத் தேவைகளுக்காக அவ்வாறு எடுப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அமைச்சர் முரளிதரன் கூறுகிறார். அரசின் இப்படியான நடவடிக்கைகளுடன் தான் உடன்படவில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply