தீப்பிடித்த பின்னரே விமானம் வெடித்தது : மங்களூரில் அவலம்
டுபாயிலிருந்து கர்நாடக மாநிலம் மங்களூருக்கு ஏயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று இன்று அதிகாலை 2.30 மணி அளவில் புறப்பட்டு வந்தது. போயிங் 737 வகையைச் சேர்ந்த அந்த விமானத்தில் 163 பயணிகள், 4 குழந்தைகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 173 பேர் இருந்தனர். சுமார் 4 மணி நேர, நேரடி பயணத்துக்குப் பிறகு அதிகாலை 6.30 மணியளவில் அந்த விமானம் மங்களூர் விமான நிலையத்தை நெருங்கியது. விமான நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அந்த விமானம் தரை இறங்க அனுமதித்தனர். போதிய வெளிச்சம் இல்லாததால் கவனமாக தரை இறங்குமாறு நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
திடீரென விமானத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானத்தில் திடீரென தீ பிடித்தது. அப்போது விமானம், விமான நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள்தான் இருந்தது.
புகை கக்கிய நிலையில்….
விமான நிலைய சுற்றுப்பகுதியை எட்டி இருந்த விமானம், தரை இறங்க சில வினாடிகள் இருந்த நிலையில், நிலை தடுமாறியது. புகை கக்கிய நிலையில் அந்த விமானம் அல்லாடியது. அதன் போக்கும் மாறியது.
இதைக் கண்டதும் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே தீ பரவுவதற்குள் விமானத்தை தரை இறக்கி விடலாம் என்று விமானிகள் முயற்சித்தாகத் தெரிகிறது. ஆனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்தது.
விமான நிலையத்தின் புதிய ஓடு தளத்தில் இறங்குவற்கு பதில் தவறுதலாக, அதன் அருகில் விமானம் தரை இறங்க ஆரம்பித்தது.. இதனால் மேலும் நிலை தடுமாறிய விமானம் இழுத்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள மலையடிவார பகுதி மீது பலத்த சத்தத்துடன் மோதியது. மறுவினாடி விமானம் வெடித்துச் சிதறியது.
உறவினர்களை வரவேற்க வந்தவர்கள் இந்த கோர விபத்தை நேரில் பார்த்ததும் துடித்துப் போனார்கள். விபத்து குறித்து உடனடியாக மீட்புக் குழுக்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்புப் படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
விமான நிலையம் அருகில் உள்ள டெக்கான் பார்க் மற்றும் ரயில் பாதை இடையே விமானம் தீ பிடித்தபடி கிடந்தது. முள்காடாக இருந்ததால், விமானத்தின் அருகில் செல்ல முதலில் மீட்புக்குழுவினர் தடுமாற வேண்டியிருந்தது. இதையடுத்து மீட்புப் பணிக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 150 வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த பாதை மூலம் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. சுமார் 25 அம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நின்றன. தீயணைப்புப் படை வீரர்கள் சுமார் 2 மணி நேரம் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
முதலமைச்சர் தகவல்
விமானம் மோதிய வேகத்தில் தீ பிடித்து வெடித்து சிதறியதால் சம்பவ இடத்திலேயே பயணிகள் பிணமாகிப் பேனார்கள். விமானப் பணியாளர்கள் உட்பட 163 பேர் பலியானதாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறினார்.
விமானத்தின் பின் பகுதியில் இருந்தவர்களில் 6 பேர் மட்டும் அதிசயமாக உயிர் தப்பினார்கள். அவர்கள் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடியபடி கிடந்தனர். உயிருக்குப் போராடியபடி கிடந்த ஒரு குழந்தையையும் மீட்புக் குழுவினர் மீட்டனர்.
அவர்கள் 6 பேரும் மங்களூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விமான விபத்துக்கான காரணம் என்ன என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். போதிய அளவு வெளிச்சம் இல்லாததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் விமானம் தரை இறங்கிக் கொண்டிருந்தபோது இடது பக்க இறக்கையில் தீ பிடித்ததாக நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார். இதபற்றியும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
போயிங் 737 ரக விமானங்களில் எல்லா நவீன வசதிகளும் உள்ளன. ஆபத்து காலத்தில் விமானத்தைத் தற்காத்துக் கொள்ளும் வசதிகளும் உள்ளன.
தரை இறங்க முயற்சிக்கும்போது நிலைமை மோசமாகியிருந்தால்கூட அந்த விமானத்தை உடனடியாக மேலே கிளப்ப முடியும். எனவே விமானியின் தவறான கணிப்பும் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply