18 வயதுக்குட்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் அனைவரும் பெற்றோரிடம் ஒப்படைப்பு

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களான 18 வயதுக்குட்பட்ட 198 பேர் நேற்று வவுனியாவில் அவர்களது பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டனர். இரத்மலானை இந்துக் கல்லூரியில் கல்வி கற்று வந்தவர்களே இவ்வாறு பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். 18 வயதுக்குட்பட்ட 294 பேர் இரத்மலானை இந்துக் கல்லூரியில் கல்வி கற்றனர். இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டும் வந்தது. இவர்களில் பலர் அவ்வப்போது பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், நேற்றுடன் 294 பேரும் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தங்களது சொந்த பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் இவர்களுக்கு கல்வி கற்பிக்க பெற்றோர் விரும்பியதால் அவர்களிடம் இச்சிறுவர்களை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்கள் கல்வியை தொடர்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் தொடர்ந்தும் செய்து கொடுக்கும் என்றும் ஆணையாளர் குறிப்பிட்டார்.

பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் வசதிகள் இவர்களுக்கும் பெற்றுக் கொடு க்கப்படும். இவர்கள் இரத்மலானையில் தங்கியிருந்த காலகட்டத்தில் இவர்களுக்குத் தேவையான விடுதி, உணவு உட்பட சகல அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்திருந்தது. இதேவேளை நேற்று பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்ட 198 பேருக்கான பிரியாவிடை வைபவம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாகவும் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

அரசின் வேண்டுகோளுக்கிணங்க புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்கும் விடயத்திலும், கல்வி கற்பித்தல் நடவடிக்கைக்கும் அகில இலங்கை இந்து மாமன்றமும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியது. நேற்று முன்தினம் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் உட்பட முக்கியஸ் தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply