பயங்கரவாதத்தை இல்லாதொழித்த நபர்களைத் தண்டிக்க முடியாது: ஜனாதிபதி
அடுத்தத் தேர்தலிலும் எனக்கு வெற்றி நிச்சயம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல் ஜசீரா ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ ஆட்சியில் நீடிப்பது உறுதி என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆட்சி முறைமை அல்லது பிரதமர் ஆட்சி முறைமை என்பதில் தமக்கு சிக்கல் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருக்காவிட்டால், அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் பிரவேசித்திருக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் புலம்பெயர் மக்கள் ஆகியோர் தம்மையும் நாட்டையும் இழிவுபடுத்தும் வகையிலான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு நிச்சயமாக தண்டனை விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் எந்தத் தராதரத்தை வகித்தாலும், தமது உறவினர்கள் என்றாலும் தண்டனை விதிக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் இராணுவத் தளபதியாக இருந்தாலும், தமது உறவினராக இருந்தாலும் தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். எனினும், பயங்கரவாதத்தை இல்லாதொழித்த நபர்களை தம்மால் தண்டிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதத்தை இல்லாதொழித்த காரணத்திற்காக தண்டனை வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் கொண்டிருந்தால், அதனை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக மட்டும் யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு முனைப்புக் காட்டும் அல்ஜசீரா ஏன் ஏனைய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளில் இடம்பெற்ற இடம்பெறும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் மௌனம் காக்கின்றது என கேள்வி எழுப்பியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply