2013ஆம் ஆண்டில் எலிசபெத் இலங்கையில்

2013ஆம் ஆண்டில் பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாடு இலங்கையில் நடைபெறுமெனவும், இம்மாநாட்டில் பிரிட்டிஷ் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கலந்துகொள்வாரென்றும் அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். இலங்கையில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டை மகாராணியார் ஆரம்பித்து வைப்பதற்காக வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் தூதரக பேச்சாளர் டொமினிக் வில்லியம்ஸும் கூறியுள்ளார்.

பொதுநலவாய அமைப்பின் அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள். பொதுநலவாயத்தின் தலைவியான மகாராணியார் எலிசபெத் மாநாட்டை ஆரம்பித்து வைப்பது வழமையான நடைமுறையாகும். பொதுநலவாய அமைய உச்சி மாநாடு இரு வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறுகிறது.2011 இல் அவுஸ்திரேலியாவிலும் 2013 இல் இலங்கையிலும் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சமாதானம், பாதுகாப்பு, ஜனநாயகம், நல்லாட்சி, அபிவிருத்தி, கடன் முகாமைத்துவம், கல்வி, சுற்றாடல், பால் சமத்துவம், சுகாதாரம், மனித உரிமைகள், தகவல் தொடர்பாடல், தொழில்நுட்பம், சட்டம், பல்தரப்பு வர்த்தக விவகாரங்கள், சிறிய நாடுகளின் விவகாரங்கள், இளைஞர் விவகாரம் என்பன தொடர்பாக பொதுநலவாய அமைப்பு மாநாட்டில் ஆராயப்படுகிறது. இந்த அமைப்பில் 54 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அநேகமான உறுப்பு நாடுகள் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply