ஒருவேளை உணவு மாத்திரம் உண்டுவரும் கல்மடு மக்கள்

மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்திருக்கும் வவுனியா கல்மடு படிவம் ஒன்று பகுதி மக்கள் போதியளவு வருமானமின்றி நாளொன்றுக்கு ஒருவேளை உணவையே உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
 
மன்னார் மாவட்டத்தின் எல்லையில் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்மடு கிராமம் 400 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. மோதல்களால் அக்கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் 2002ஆம் ஆண் பிற்பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டனர். 400 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட அக்கிராமத்தில் 375 ஏக்கர் நிலப்பரப்பு உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதால் எஞ்சிய பகுதியிலேயே மக்கள் மீளக்குடியமர்த்துள்ளனர்.

கிராமத்தின் பெரும்பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயமாக இருப்பதால் வருமான மார்க்கமாக கால்நடைகளைப் பராமரிக்கவோ, விவசாயத்தில் ஈடுபடவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கல்மடு கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் வருமானங்கள் இழக்கப்பட்டிருப்பதாக கிராமத்துக்குச் சென்ற எமது வவுனியா செய்தியாளர் அறியத்தருகிறார்.

இந்த கிராமத்தில் வாழ்ந்து வரும் மக்களில் 50 வீதமாக மக்களுக்கு 360 பெறுமதியான சமுர்த்தி முத்திரை வழங்கப்பட்டுள்ளது. அதுவே அவர்களுக்கான ஒரேயொரு உதவி நிவாரணமாகவும், வருமானமாகவும் அமைந்துள்ளது. இவ்வாறான நிலையில் அங்கு 70 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

பாதுகாப்புக் கெடுபிடி

கல்மடுக் கிராமத்தின் அயல் கிராமங்களில் ஒன்றான ஈச்சங்குளம் பகுதியில் விடுதலை புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம் உள்ளமையாலும் கல்மடு படிவம் ஒன்று கிராம மக்களை இராணுவத்தினர் எப்பொழுதும் சந்தேகக் கண்ணோடுபார்ப்பதுடன், அடிக்கடி சுற்றிவளைப்புத் தேடுதல்களை நடத்துவதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.

மாலை ஆறு மணியுடன் எந்த ஒரு கிராம வாசியும் வெளியில் நடமாட முடியாததுடன், கிராமத்திற்கு மின்சாரம் இல்லையெனவும் கல்மடு கிராமத்துக்கு விஜயம் செய்த எமது செய்தியாளர் கூறினார். கிராம மக்களுக்கு இரவில் ஏதேனும் அவசரம் ஏற்பட்டால் விளக்குகளுடன் இராணுவத்தினரை நாடி அவர்களுக்கு அறிவிக்கவேண்டும் எனவும் தெரியவருகிறது.

இரவில் கிராமத்தில் உள்ள ஒருவருக்கு சுகவீனம் ஏற்படும் பட்டத்தில் அவர்கள் இராணுவத்தினருக்கு முறையிட்டு இராணுவத்தினர் ஈச்சங்குளம் தாண்டிக்குளம் வீதியில் உள்ள இராணுவ முகாம்களுக்கு அறிவித்ததன் பின்னரே சுகவீனமுற்றவரை வவுனியா வைத்திய பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லமுடியும் என கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்.

தாம் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் குறித்து வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருந்தபோதும் இதுவரை எந்த உதவிகளும் செய்துகொடுக்கப்படவில்லையென வவுனியா கல்மடு படிவம் ஒன்று பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply