தேசிய வெற்றிவிழா கொண்டாட்டம்; இன்று கொழும்பில் கோலாகலம்
பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடித்ததன் வெற்றியைக் கொண்டாடும் தேசிய வெற்றி விழா மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பு இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறுகிறது. யங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்துள்ள தேசிய வெற்றி விழா கொண்டாட்டம் மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பு காலை 8 மணிக்கு காலி முகத்திடலிலும் மாலை 4.30 மணிக்கு படைவீரர்களின் தேசிய நினைவு தின வைபவம் பாராளுமன்ற மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளில் முப்படைகளின் தளபதிகள் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இதனை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப் பட்டுள்ளதுடன் காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்கள் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.
தேசிய வெற்றி விழா கொண்டாட்டம் மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பில் முதற்தடவையாக முப்படைகள் மற்றும் பொலிஸார் ஒன்பது ஆயிரம் பேர் இம்முறை பங்குகொள்ளவுள்ளதுடன் அணி வகுப்பின்போது வழமையை விட வித்தியாசமான முறையில் முப்படையினர் தமது சாகசங்களை காண்பிக்கவுள்ளதாக இராணுவப் பேச்சாளர், மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
இவர்களில் 537 முப்படை அதிகாரிகளும், 8960 முப்படை வீரர்களும் அடங்குவர். பிரதான வைபவங்களில் பிரதமர் தி.மு.ஜயரட்ண, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதம நீதியரசர், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் விமானப் படைத் தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க, பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
பாதுகாப்புப் படையினரின் வெற்றியை பாராட்டும் வகையிலும் அவர்களது சாகசங்களை வெளிப்படுத்தும் வகையிலும் முப்படைகளின் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்புக்கள் இடம்பெறவுள்ளன.
வழக்கமான அணி வகுப்புக்கு மேலதிகமாக இறுதிக்கட்ட படை நடவடிக்கையில் கலந்துகொண்ட பெரும்பாலான படை வீரர்கள் முதற் தடவையாக பங்குகொண்டு பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டமை தொடர்பில் செயல்முறையில் காண்பிக்கவுள்ளதுடன் அதற்காக பயன்படுத்திய கனரக ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை காண்பிக்கவுள்ளனர்.
யுத்த நடவடிக்கையின்போது அங்கவீனமுற்ற படைவீரர்களும் சக்கர நாற்காலிகளில் இருந்தவாறு அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளனர்.
இராணுவம்
இராணுவ அணிவகுப்பில் அதிகாரிகளும், இராணுவ வீரர்களும் பங்குகொள்ளவுள்ளனர். யுத்தத்திற்கு பயன்படுத்தப்பட்ட கனரக வாகனங்கள், கவச வாகனங்கள், பீரங்கிகள், தாக்குதல் துப்பாக்கி பொருத்தப்பட்ட வாகனங்கள், பல்குழல் ஏவுகணைகள், சமிக்ஞை, ராடார் கருவிகள், திரைக் காட்டி கருவிகள், கண்ணிவெடி அகற்றும் பிரிவு ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
கடற்படை
கடற்படை அணி வகுப்பில் 30 அதிகாரிகளும், 1400 கடற்படை வீரர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது காலி முகத்திடல் கடற்பரப்பில் பல்வேறு சாகசங்களை காண்பிக்கவுள்ளனர். இறுதிக்கட்ட நடவடிக்கையின்போது பயன்படுத்தப்பட்ட சயுர, சமுதுர, சயுரல, சாகர, சுரணிமல, நந்தமித்ர ரணதீர மற்றும் அபீத ஆகிய கடற்படை கப்பல்களும், அதிவேக தாக்குதல் படகுகள்௧5, அதிவேக டோராக்கள், ஜெட் லைனர் கப்பல், விஷேட ரோந்து படகுகள் உள்ளிட்ட 50 கப்பல், படகுகள் கடற்பரப்பில் சாகசங்களை காண்பிக்கவுள்ளன.
விமானப்படை
விமானப் படை அணிவகுப்பில் 124 அதிகாரிகளும் 1200 விமானப்படை வீரர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். விமானப் படை விமானங்கள் கொழும்பு வான் பரப்பில் தமது சாகசங்களை காண்பிக்கவுள்ளன. விமானப்படை ஹெலிகள், விமானங்கள், தேசிய கொடிகளை பறக்கவிட்ட நிலையில் வானில் பல்லாயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டு சாகசங்களை காண்பிக்கவுள்ளன. விமானப் படையின் கபீர், எப்௭, மிக்- 27, தாக்குதல் விமானங்களும், பரசூட் பிரிவினர்களும் பறந்தவாறு சாகச விளையாட்டுக்களை காண்பிக்க வுள்ளனர்.
பொலிஸ்
பொலிஸாரின் அணி வகுப்பில் பொலிஸாருடன், விஷேட அதிரடிப்படையினர் பங்குகொள்ளவுள்ளனர். பொலிஸ் பெண்கள் பிரிவுகள், விஷேட அதிரடிப்படையினர், பொலிஸ் குதிரைப் படையினர், 145 வருடம் பழமைவாய்ந்த பொலிஸ் பாண்ட் வாத்தியக் குழுக்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
பெருந்தொகையான பொது மக்கள் நேரில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் காலி முகத்திடல் அண்மித்த பிரதேசங்களில் போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இராணுவ வெற்றி அணிவகுப்பு வைபவம் கடந்த மே மாதம் 20ம் திகதி நடாத்த சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் மோசமான காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply