எமது வீரர்களைக் காட்டிக்கொடுத்ததை விட பாரிய தேசத்துரோகம் எதுவுமில்லை : ஜனாதிபதி
நாட்டின் இறைமையையும் மக்களையும் பாதுகாப்பதற்காகப் போராடிய வீர மைந்தர்கள், எமது இராணுவ வீரர்கள். அவர்கள் யுத்த குற்றம் செய்ததாகக் கூறியதைவிட மிகப்பெரிய காட்டிக்கொடுப்பு எதுவுமில்லை. இதுதான் பாரிய தேசத்துரோகம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் தெரிவித்தார். இராணுவ வெற்றியைக் கொண்டாடும் முகமாக கொழும்பு காலிமுகத்திடலில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளும் ஜனாதிபதி, காலை 8.28 மணிக்கு அங்கு வருகை தந்தார். அவரை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் முப்படைத் தளபதிகள் வரவேற்றனர்.
அதன்பின்னர் 8.30 மணிக்கு தேசிய கொடியேற்றும் நிகழ்வைத் தொடர்ந்து இராணுவ அணிவகுப்பு இடம்பெற்றது. அதனையடுத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “சற்றுமுன்னர் நான் தேசிய கொடி ஏற்றி வைக்கும்போது, ஒரு வருடத்துக்கு முன்னர் உயிரிழந்த இராணுவ வீரர்களின் இறுதி மூச்சை உணர்ந்தேன்.
எமது நாட்டை இரண்டாக பிளவுபடுத்த விடுதலைப் புலிகள் மட்டும் முயற்சி செய்யவில்லை. நாடாளுமன்றத்திலும் அதற்கான முயற்சி நடந்தது.
நாட்டைப் பிளவுபடுத்த விட மாட்டேன்
எந்தவொரு காரணத்துக்காகவும் எப்போதும் எமது தாய்நாட்டை பிளவுபடுத்த இனிமேலும் நான் இடமளிக்க மாட்டேன். வீரம் என்பது எமது பாரம்பரியத்தில் ஊறிவிட்ட ஒன்று. அதனை பிற தேசங்களிலிருந்து இறக்குமதி செய்யத் தேவையில்லை.
தாய்நாட்டுக்காகவும் அதன் இறைமைக்காகவும் மக்களுக்காகவும் போராடிய வீர மைந்தர்கள் எமது இராணுவ வீரர்கள். அவர்களைக் காட்டிக் கொடுப்பதைப் போன்ற மாபெரும் தேசத்துரோகம் வேறு எதுவுமில்லை.
இறுதிக்கட்ட யுத்தம் நடைபெறும்போது வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்களைக் கொலை செய்ததாக எமது வீரர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்றார்கள். அது எந்த வகையில் உண்மை என்பது யாவருக்கும் தெரியும். ஒருகையில் துப்பாக்கி, மறுகையில் மனிதாபிமானம் என யுத்தத்தை நடத்திய எமது வீரர்களை எவ்வாறு காட்டிக்கொடுக்க முடியும்?
எந்தவொரு சாதாரண பிரஜையையும் தனது துப்பாக்கியால் கொலை செய்யாதவர்கள் எமது இராணுவ வீரர்கள். யுத்தகாலத்தில் பல்வேறு தரப்பினர் பல்வேறு விடயங்களைப் பேசினார்கள். ஆனால் கிழக்கில் மனிதாபிமானப் பணிகள் நிறைவடைந்தவுடன் துரிதமாக அபிவிருத்தி நடந்தது. வடக்கிலும் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. நான் அனைத்து மக்களையும் சமமாகவே பார்க்கிறேன்” எனத் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply