பத்துத் தடவைக்கு மேல் இடம்பெயர்ந்த குடும்பம்: எமில்டா சுகுமார்
முல்லைத்தீவு மாவட்டத்தில் சில குடும்பம் 10 தடவைக்கு மேலாக இடம்பெயர்ந்திருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார் தெரிவித்தார்.
மோதல்கள் காரணமாக ஏற்கனவே இடம்பெயர்ந்த மக்கள் வெள்ளப்பெருக்கால் மீண்டும் இடம்பெயர்ந்து தற்பொழுது உக்கிரமடைந்திருக்கும் மோதல்களால் அடுத்ததடவை இடம்பெயர்ந்து வருவதாக அவர் கூறினார்.
ஒரு குடும்பம் 10 தடவைகளுக்கு மேல் இடம்பெயர்ந்ததாக நான் கேள்விப்பட்டேன். ஒரு வீட்டில் ஏழு குடும்பங்கள் தங்கியிருப்பதை நான் கண்டேன். அந்த வீடு உருப்படியானதாக இல்லை. வீட்டுடன் இணைத்து தற்காலிக கூடாரங்களை அமைத்தே அவர்கள் தங்கியுள்ளனர்” என்றார் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்.
அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும், வன்னியிலுள்ள மக்கள் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கியே இடம்பெயர்ந்து வருவதாக அவர் கூறினார்.
விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஏன் அவர்கள் வரவில்லையென எனக்குத் தெரியாது. ஆனால் ஓட்டுசுட்டான் பகுதியிலிருந்த மக்கள் புதுக்குடியிருப்பை நோக்கி இடம்பெயர்வதை நான் கண்டேன்” என்றார் எமில்டா சுகுமார்.
ஷெல் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதால் முல்லைத்தீவில் தங்கியிருக்கும் மக்கள் மீண்டும் ஒருதடவை இடம்பெயர்வதற்காக தமது உடமைகளைப் பொதிசெய்ய ஆரம்பித்துள்ளனர் எனக் குறிப்பிட்ட முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், புதுக்குடியிருப்புப் பகுதியிலுள்ள மக்கள் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியர்களின் தவல்கள் கூறுவதாகத் தெரிவித்தார்.
மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் உலக உணவுத் திட்டத்தின் ஊடாகக் கிடைக்கும் நிவாரணப் பொருள்களை நாங்கள் இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கிவருகிறோம். அவர்களுக்கு உலருணவுப் பொருள்கள் மாத்திரமே கிடைக்கின்றன. பெரும்பாலானவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களாக அதிகரித்த ஷெல் தாக்குதல்களால் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து வெளியேற முடியாத நிலையிலிருந்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தற்பொழுது வவுனியா வந்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply