புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு

புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச ஆதரவாளர்கள், போருக்குப் பின்னரான புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளில் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க முன்வந்துள்ளனர். புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவரான குமரன் பத்மநாதன் உள்ளிட்ட ஒன்பது புலம்பெயர் தமிழ்ப் புத்தி ஜீவிகள் குழு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளது.கனடா, சுவிட்சர்லாந்து, ஜேர்மன், பிரிட்டன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் குமரன் பத்மநாதன் ஏற்பாட்டில் கொழும்புக்கு வந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவையும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதன் போதே அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உதவ அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். புலிகளின் ஆதரவாளர்களது இந்த மனமாற்றம் குறித்துக் கருத்துத் தெரிவித்த குமரன் பத்மநாதன் (கே. பீ.), வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் தற்போது யதார்த்த நிலையை நன்கு புரிந்துகொண்டுள்ளார்கள் எனக் குறிப்பிட்டார். கடந்த வருடம் மே மாதம் யுத்தம் நிறைவுக்கு வந்ததிலிருந்து நாட்டின் நிலவரத்தைப் புலம்பெயர் தமிழர்கள் நன்கு அவதானித்து வருகின்றனர். ஆரம்பத்தில் நாட்டில் அமைதியை விரும்பாத சில அமைப்புகள் எதிர்மறையான பிரசாரங்களை முன்னெடுத்து வந்தன. எனினும் கடந்த ஒரு வருட காலத்தில் புலிகளின் ஆதரவாளர்களாகவிருந்த புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பாரிய மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக பத்மநாதன் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்திய பத்மநாதன் தலைமையிலான குழுவினர் வடக்கில் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கும் நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

மீள்குடியேற்றத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டிய தாகவும், அதனை நிவர்த்திப்பதாக அரசாங்கத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள் ளதாகவும் பத்மநாதன் தெரிவித்தார்.

“புலிகள் இயக்கத்திற்காக வெளிநாடுகளில் திரட்டப்பட்ட பெருந்தொகையான நிதியை அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு வழங்கப் போவதாகத் தெரிவித்த குமரன் பத்மநாதன், இதனை ஒருங்கமைப்பதற்காக வெளிநாட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க இணக்கம் காணப்பட்டுள்ள தாகவும் குறிப்பிட்டார். “வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டம்” எனப் பெயரிடப்பட வுள்ள இந்தத் தன்னார்வ அமைப்பின் மூலம், போருக்குப் பின்னரான மனிதாபிமானப் பணிகள் குறித்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வெளிநாடுகளில் புலிகளுக்குப் பல மில்லியன் டொலர் சொத்து உள்ளதாக கூறிய குமரன் பத்மநாதன், புலிகளுக்காக சேகரிக்கப்பட்ட பணத்தைக் கையாள்வோர் தற்போது அதனை நாட்டின் மனித நேயப் பணிகளுக்குப் பரிமாற்றம் செய்ய இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, அரசாங்கத்துடன் இணை ந்து செயற்படுவதென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்பதாகக் கூறிய கே. பீ, எந்தவிதமான வேறுபாடுகளுமின்றி சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றுபட்டுப் பாடுபடவேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply