செம்மொழி மாநாடு கோவையில் நாளை ஆரம்பம் : ஏற்பாடுகள் பூர்த்தி

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, கோவையில் நாளை முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. கொடிசியா வளாகம் தயார் நிலையில் ஜொலிக்கிறது. கோவை நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. விழா ஏற்பாடுகளை முதலமைச்சர் கருணாநிதி நேற்றுப் பார்வையிட்டார்.

மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதும் இருந்து தமிழ் அறிஞர்கள் கோவை வந்துள்ளனர். விழாவைக் கண்டு மகிழ தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்றிரவு விமானம் மூலம் கோவை செல்கிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து குதிரைப் பந்தயத் திடல் சுற்றுலா மாளிகை சென்று அங்கு தங்குகிறார்.

செம்மொழி மாநாடு தொடக்க விழா, நாளை காலை 10.30 மணிக்கு மாநாட்டு வளாகத்தில் உள்ள பிரமாண்ட பந்தலில் தொடங்குகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து மையநோக்க பாடல் ஒலிக்கிறது.

முதலமைச்சர் தலைமையில்….

முதலமைச்சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றுகின்றார். தமிழக கவர்னர் பர்னாலா மாநாட்டு சிறப்பு மலரை வெளியிடுகிறார். அமைச்சர் அன்பழகன் தகுதி உரை வழங்குகிறார்.

ஜனாதிபதி பிரதீபா பட்டீல், ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை’ பின்லாந்து நாட்டைச் சேர்ந்த தமிழ் அறிஞர் அஸ்கோபர் போலாவுக்கு வழங்குகிறார்.

பின்னர் முதலமைச்சர் கருணாநிதி தலைமையுரை நிகழ்த்துகிறார். கவர்னர் பர்னாலா சிறப்புரை வழங்குகிறார். ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மாநாட்டு தொடக்கவுரை ஆற்றுகிறார். முன்னதாக ஜோர்ஜ் ஹார்ட் (அமெரிக்கா), வா.செ.குழந்தைசாமி, பேராசிரியர் சிவத்தம்பி (இலங்கை) ஆகியோர் வாழ்த்திப் பேசுகிறார்கள். முடிவில் அரசு செயலாளர் ஸ்ரீபதி நன்றிகூறுகிறார்.

அலங்கார ஊர்திகள் பவனி

நாளை மாலை 4.00 மணிக்கு ‘இனியவை நாற்பது’ என்ற தலைப்பில் இலக்கியம், கலை, வரலாறு என்பவற்றை நினைவுகூரும் வகையில் அலங்கார ஊர்திகள் அணி வகுக்கும் பிரமாண்ட பேரணி நடக்கிறது. இதில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.

கோவை வ.உ.சி. பூங்காவில் இருந்து மாநாட்டு வளாகம் வரை இந்த பேரணி நடக்கிறது. 6 வழி சாலையான அவினாசி வீதியின் ஒரு பகுதி வழியாக பேரணி நடைபெறுகிறது. மறுபகுதி பேரணியைப் பொது மக்கள் பார்த்து மகிழ்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

8 கிலோமீட்டர் தூரம் நடைபெறும் பேரணியை ஜனாதிபதி, முதலமைச்சர், முக்கிய தலைவர்கள் பார்ப்பதற்காக கோவை லட்சுமி மில் அருகே அலங்கார மேடை அமைக்கப்பட்டுள்ளது.

இது தவிர வெளிநாட்டு பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள், தமிழ் அறிஞர்கள் மாநாட்டைப் பார்வையிடுவதற்காக மேலும் 6 மேடைகள் வழி நெடுக அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பேரணியைத் தடையின்றிப் பார்த்து ரசிப்பதற்கும் பீளமேடு பகுதியில் நீண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. பேரணியில் செல்பவர் களுக்காக குடிநீர், மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளன. பேரணி செல்லும் வழியில் ஆங்காங்கே சுகாதார வசதியும் உள்ளது.

மாநாட்டையொட்டி கோவையில் 11 ஆயிரம் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டு வளாகம், பேரணி செல்லும் பாதையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply