அளவுக்கு மீறித் துள்ளுகிறார் கோட்டா! ஜே.வி.பி கண்டனம்
பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோட்டாபாய அளவுக்கு மீறித் துள்ளுகிறார் என்று ஜே.வி.பி இன்று சாடி உள்ளது. அக்கட்சியின் முக்கிய பிரமுகரான விஜித ஹெரத் தேவை இல்லாமல் கோட்டாபய துள்ளுகிறார் என்று தெரிவித்தார். அரசினால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஜே.வி.பி தடையாக உள்ளது என்று பாதுகாப்புச் செயலாளர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளரின் இக்கூற்றுக்கு ஜே.வி.பி கடும் கண்டனம் வெளியிட்டு ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளித்தது.அவ்வாறு விளக்கம் அளித்தபோதே விஜித ஹெரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:
கோட்டாபய வெறும் அரச உத்தியோகத்தர் மாத்திரமே. பாதுகாப்புச் செயலாளர் பதவி என்பது அரச பதவியே. ஆனால் அவர் அரச உத்தியோகத்தர் என்ற வரம்பைக் கடந்து அளவுக்கு மீறிப் பேசுகின்றார். அவர் ஜே.வி.பி மீது சுமத்தி இருக்கும் குற்றச்சாட்டுக்கள் மிகவும் பாரதூரமானவை.வடக்கின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஜே.வி.பி தடையாக உள்ளது என்று அவர் கூறி உள்ளார்.
ஆனால் வடக்கில் தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்காதிருக்கிறது என்பதே உண்மை. யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் வட மாகாண அகதிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க முடியாத நிலையில் அரசு இருக்கின்றது. ஏற்கனவே யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் அரசின் மீள்குடியேற்ற நடவடிக்கையால் மீண்டும் இடம்பெயர வேண்டி ஏற்பட்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்து ஒரு வருடங்கள் ஆகி விட்ட போதிலும் அரசு சமாதான முன்னெடுப்புக்களைத் தள்ளி வைத்துக் கொண்டே செல்கின்றது. ஜே.வி.பி மக்களின் கட்சி.எனவே மக்களின் பிரச்சினைகளை முன்னின்று தீர்த்து வைப்பது ஜே.வி.பியின் கடமை.பாதுகாப்புச் செயலாளரின் விமர்சனம் மக்களுக்குச் சேவை செய்வதில் இருந்து எமது கட்சியைத் தடுத்து விடாது. எமது கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த அவரால் முடியாது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply