பலாலி இராணுவ முகாமிலுள்ள தபாலகத்தில் பல மில்லியன் ரூபா மோசடி

யாழ்ப்பாணம், பலாலி இராணுவ முகாமிலிருக்கும் அஞ்சல் அலுவலகத்தில் நடந்திருக்கும் பல மில்லியன் ரூபா பண மோசடி குறித்து விசாரிப்பதற்கு அஞ்சல் திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் குழுவொன்று குடாநாடு சென்றிருப்பதாக தபால்மா அதிபர் தெரிவித்தார். 
 
இராணுவ முகாமுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் அஞ்சல் அலுவலகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளால் 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவம் நடந்திருப்பது இதுவே முதற்தடவையல்ல. இதற்கு முன்னரும் இதைப்போன்ற பல சம்பவங்கள் திணைக்களத்தில் நடந்துள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக இந்த மோசடி தொடர்ந்துள்ளது. இந்த வருடத்தில் இது இரண்டாவது தடவையாக நடந்திருக்கும் மோசடிச் சம்பவம்” என தபால்மா அதிபர் எம்.கே.பி.திஸ்ஸாநாயக்க கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

பலாலி தபாலகத்திலிருந்து 9 மில்லியன் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களடங்கிய ஆவணங்களை விசாரணை அதிகாரிகள் இதுவரை சேகரித்திருப்பதாக அவர் கூறினார்.

அவற்றைக்கொண்டு விசாரணைகள் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்ட தபால்மா அதிபர், சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

பலாலி தபாலகத்தில் நடைபெற்றிருக்கும் மோசடிகள் குறித்து 2008ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே தபால் திணைக்களத்துக்குத் தெரியவந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அங்கிருந்த தபால்நிலையப் பொறுப்பதிகாரியை வேறிடத்துக்கு மாற்றியதாகவும் கூறப்படுகிறது. எனினும், யாழ் குடாநாட்டில் காணப்படும் மோசமான சூழ்நிலை காரணமாக அங்கு செல்வதற்கு எவரும் விரும்பவில்லையென தபால் திணைக்கள வட்டாரங்கள் கூறுகின்றன.

பலாலி தபாலகத்தில் நடந்த 1.4 ரூபா பண மோசடி குறித்து விசாரணை செய்வதற்கு முன்னர் விசாரணைக்குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்த மோசடிச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர் உரிய பணத்தைச் செலுத்துவதற்கு இணங்கியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply