இன்று தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம் உருவாக்கம் (படங்கள் இணைப்பு)
இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் இன்றையதினம் ஒன்றுகூடி தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம் உருவாக்கியதுடன் தமிழ் மக்களின் இன்றைய அரசியல் நிலவரம் தொடர்பாகவும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளனர். இன்றுகாலை கொழும்பில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தமிழ்க் கட்சிகளுக்கிடையில், தமிழ் மக்களின் நலன்களுக்கான பொது வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்து ஆராயப்பட்டது.
கடந்த மாதம் 24ம் திகதி தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் ஒன்றுகூடி தமிழ் மக்களின் இன்றைய அரசியல் நிலவரம் தொடர்பாகவும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கூடி ஆராய்வதற்கென ஆரம்பித்த பொது இணக்கப்பாட்டின் தொடர்ச்சியாகவே இன்றைய முக்கிய சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
முதலில் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாமற்போன கட்சிகள் தொடர்பாகவும் மேலும் இணைந்துகொள்ளக்கூடிய கட்சிகள் தொடர்பாகவும் அக்கட்சிகளை இணைத்துக் கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் சமகாலத்தில் மக்கள் எதிக்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இதன்பிரகாரம் தமிழ்க் கட்சிகளின் ஒன்றியமாக பொது நோக்கத்தின் அடிப்படையில் நோக்கங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதென்றும் அதற்கென ஓர் குழு அமைக்கப்பட்டு இதற்கான வரைபுகளை அக்குழுவானது எதிர்வரும் 4ம் திகதி ஒன்றுகூடி தயாரித்து எதிர்வரும் 7ம் திகதி மீண்டும் ஓன்றுகூடவுள்ள தமிழ்க் கட்சிகளின் ஒன்றியத்திடம் கையளிப்பது எனவும் ஏகமனதாக முடிவுசெய்யப்பட்டது. இக்குழுவில் ஆர்.சுரேந்திரன் ஆர்.ராகவன் ஏ.சி.கைலேஸ்வரராஜா தி.சிறிதரன் எம்.சந்திரகுமார் பேரின்பநாயகம் ரி.சிவாஜிலிங்கம் என்.குமரகுருபரன் ஷெரீன் சேவியர் ஆகியோர் அங்கத்தவர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி தந்தை செல்வாவின் புதல்வரும் ஒவ்பர் அமைப்பின் இயக்குனருமாகிய திரு. செல்வநாயகம் சந்திரகாசன் மற்றும் பேரின்பநாயகம் நாபா ஈபிஆர்எல்எப் சார்பில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் திரு. வரதராஜப்பெருமாள் செயலாளர் திரு.தி.சிறிதரன் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சதானந்தம் மற்றும் ஆர்.ராகவன் தமிழ் தேசிய விடுதலை முன்னணி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் அதன் செயலாளர் ஏ.சி.கைலேஸ்வரராஜா கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. பூ.பிரசாந்தன் சிறி ரெலோ அமைப்பின் தலைவர் திரு உதயன் திரு. ஜீ.சுரேந்திரன் ஜனநாயக மக்கள் முன்னணி செயலாளர் திரு.நல்லையா குமரகுருபரன் மனித உரிமை ஆர்வலர் ஷெரீன் சேவியர் மற்றும் மேகலா ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் சந்திரகுமார் அசோக் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்டின் உதயன் சர்வதேச அமைப்பாளர் மித்திரன் ஆகியோர் உட்பட பல முக்கியஸ்தர்களும் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : TELOnews
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply