விடுதலைப்புலிகள் மீண்டும் ஒன்றிணைய இடமளிக்காத வகையில் நடவடிக்கைகள் : கோத்தபாய ராஜபக்ஷ

விடுதலைப்புலிகள் மீண்டும் ஒன்றிணைய இடமளிக்காத வகையில் முப்படை மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவுகளில் தகவல் பணியகங்களுக்கான புலனாய்வு அதிகாரிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். இதனடிப்படையில் புலனாய்வுப் பிரிவினரின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
மன்னாரில் இருந்து டெட்டநேட்டர்கள் கொண்டு செல்லப்பட்டமை, தமிழ் நாட்டில் இருந்து பெருமளவிலான டெட்டநேட்டார்கள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்டமை மற்றும் மட்டக்களப்பு, மாத்தறை பகுதிகளில் புலிகளின் இரண்டு புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டமை ஆகிய சம்பவங்களினால் வடக்கு கிழக்கு நிலைமைகள் குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
 
அதேவேளை அவுஸ்த்ரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை போல் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த புலிகளின் ஆதரவாளர்கள்,புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது.
 
கிட்டு மோட்டார் படையணியை சேர்ந்த தலைவர் ஒருவர் யாழ்ப்பணத்தில் இருப்பதாக அறியக் கிடைத்துள்ளது எனவும் இந்த நிலைமைகளினால் புலனாய்வுப் பிரிவினரின் எண்ணிக்கையை அதிகரிக்க நேர்ந்துள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
 
அதேவேளை வடக்கு கிழக்கில் கடற்படையினரின் ரோந்து பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் கடற்படைத் தளபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
 
வடக்கு கிழக்கில் உள்ள பெரும் எண்ணிக்கையான மக்கள் கையடக்க தொலைபேசிகளை வைத்திருப்பதால், இந்த கையடக்க தொலைபேசிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து தினம் அதிகளவிலான அழைப்புகள் எடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், புலிகளின் சர்வதேச வலையமைப்பினர் இலங்கையில் மீண்டும் தலையீடுகளை முயற்சிப்பதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியவந்துள்ளது எனவும் திவயின குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply