எந்தவித சர்வதேச விசாரணைக் குழுவுக்கும் அடிபணியப் போவதில்லை: ஜனாதிபதி
எந்தவொரு சர்வதேச விசாரணைக் குழுவுக்கோ, அழுத்தங்களுக்கோ அடிபணிந்து இலங்கையின் சுயாதீனத்தன்மையையும் இறையாண்மையையும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை. நாட்டை காட்டிக் கொடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். உள்நாட்டின் நீதிமன்றத் துறைக்கு சர்வதேச விசாரணைக் குழுக்களினால் களங்கம் ஏற் படுமாயின் அதற்கு இலங்கை அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது. பயங்கரவாத யுத்தம் இல்லாத இலங்கையில் சகல இன மக்களும் சமாதானத்துடன் வாழ்கின்றமை இலங்கை அடைந்த பாரிய வெற்றியாகும். இதேபோன்று பொருளாதார அபிவிருத்தியில் வெற்றி இலக்கை அடைய வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தேசிய தபால் சேவை தொல்பொருள் கூடம் மற்றும் முத்திரை கண்காட்சியகம் ஆகியவற்றை நேற்று செவ்வாய்க்கிழமை தபால் மற்றும் தொலைத் தொடர்பு தலைமையகத்தில் அங்குரார்ப்பணம் செய்த பின்னர் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
யுத்தம் இல்லாத சமாதானமான இலங்கையே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். தற்போது நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் அரசும் நாட்டு மக்களும் செயற்படுகின்றனர். ஆனால் இலங்கையின் அபிவிருத்தி பயணத்திற்கு எதிராக பல்வேறு காரணங்களை முன்வைத்து சர்வதேச அழுத்தங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.
கடந்த காலங்களில் பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுக்கும் போதும் சர்வதேசம் அழுத்தங்களைக் கொடுத்தது. அதே போன்று தற்போதும் நாம் பொருளாதார அபிவிருத்தி இலக்கை அடைய முயற்சி செய்கையில் அதனை தடுக்கும் வகையில் உள்நாட்டில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் உள்ளதாக கூறி சர்வதேசம் விசாரணைக் குழு மூலம் அழுத்தங்களை கொடுக்கின்றது. உள்நாட்டின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையின் நீதிமன்றங்கள் சுயாதீன தன்மையுடன் செயற்படுகின்றன. நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக தீர்ப்புகள் வழங்கப்பட்ட பல சந்தர்ப்பங்களில் அரசாங்கம் நீதிமன்றத்தை அகௌரவப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளவில்லை. இவ்வாறான இலங்கையின் நீதிமன்ற துறைக்கு சர்வதேச விசாரணைக் குழுக்களினால் அகௌரவம் ஏற்படுமாயின் அதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைகளுக்கு உள்நாட்டிலும் உதவிகள் வழங்கப்படுவதை நினைக்கும் போது கவலையாக உள்ளது.
இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த போது இந்தியாவின் வெளிநாட்டு கொள்கைகளில் அரசாங்கத்திற்கு உதவி செய்வோம். ஆனால் உள்நாட்டில் பல விடயங்களில் எதிராக செயற்படும் நிலையே உள்ளது எனக் கூறினார். ஆனால் இலங்கையில் மாற்றியமைக்கப்பட வேண்டிய விடயங்கள் ஏராளம் உள்ளன. நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். இதற்கு அமைவாக உலக சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நவீன தொழில் நுட்பங்களை ஏற்படுத்த வேண்டும். தேசிய தபால் சேவை தொல்பொருள் கூடமானது நாட்டின் தேசியத்துவத்திற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் உதவியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நிகழ்வை நினைவுகூரும் முகமாக வெளியிட்ட முத்திரையில் வவுனியா மாணவியொருவர் வரைந்த சித்திரமே உள்ளது.
இது இலங்கைக்கு கிடைத்த முக்கியமான சந்தர்ப்பமாகவே நான் கருதுகிறேன். சமாதானமான இலங்கையை எதிர்கால சந்ததியினருக்கு வழங்க வேண்டியது எமது கடமையாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply