விமல் வீரவன்சவின் உண்ணாவிரதத்துக்கு மனோ கணேசனின் பதிலடி

தேசிய அரசியல் உரிமைகளையும், உயிர்வாழும் உரிமையையும் வேண்டி நிற்கும் தமிழ் மக்கள் செய்ய வேண்டியதை ஆளுகின்ற அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் செய்வது விந்தையானது எனவும் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் வாழும் தமிழ் மக்கள் அறவழி சாத்வீக போராட்டங்களை மீண்டும் ஆரம்பித்திட வேண்டும் என்பதையே அமைச்சர் விமல் வீரவன்சவின் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டம் வலியுறுத்துகின்றது என்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஐநா வளாகத்திற்கு முன்னால் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஆரம்பித்துள்ள சாகும்வரை உண்ணாவிரதம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் மக்களின் தேசிய அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. யுத்தத்திற்கு முந்தைய காலகட்டத்திலும், யுத்தத்தின் போதும் தமிழ் மக்களின் உயிர் வாழும் உரிமைகள் பறிக்கப்பட்டன.

ஆயுத போராட்டத்திற்கு முன்னர் இடைக்கிடையே நடைபெற்ற சாத்வீக போராட்டங்களை தற்போது தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் மீண்டும் ஆரம்பிக்கவேண்டும் என்பதையே அமைச்சர் விமல் வீரவன்சவின் உண்ணாவிரத போராட்டம் எடுத்துக்கூறுவதாக கருதுகின்றேன்.

தற்போது யுத்தம் முடிவிற்கு வந்துவிட்டது. ஆனால் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணங்கள் முடிவிற்கு கொண்டுவரப்படவில்லை. அரசாங்கம் தொடர்ச்சியாக அரசியல் தீர்வை ஒத்திவைத்துகொண்டே வருகின்றது. இச்சந்தர்ப்பத்தில் உண்மையில் தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள்தான் உண்ணாவிரதம் உட்பட அனைத்து சாத்வீக போராட்டங்களையும் முன்னெடுக்கவேண்டும். இதன் மூலம் உலகிற்கும், அரசாங்கத்திற்கும் தமிழர்களின் போராட்ட நியாயங்களை எடுத்துக்கூறவேண்டும்.

இது நடைபெற்றிருக்குமானால் அதில் நியாயம் இருந்திருக்கும். ஆனால் அதற்கு பதிலாக ஆளுகின்ற அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சரும், ஆளுங்கூட்டணியின் பங்காளிக் கட்சி தலைவருமான விமல் வீரவன்ச அனைத்து உலக நாடுகளின் அமைப்பான ஐநா சபையின் கொழும்பு வளாகத்திற்கு முன்னால் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

வீரவன்சவின் உண்ணாவிரதத்தின் நோக்கத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் தனது நோக்கத்திற்காக அவர் தன்னை அர்பணித்துக்கொண்டுள்ளார் என்பது அப்பட்டமாக தெரிகின்றது. இது தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்திடவேண்டும். எங்களது உரிமைகளை ஐநா சபையும், சர்வதேச சமூகமும் கொண்டுவந்து தரும் என காத்திருக்காமல் முப்பது ஆண்டுகால ஆயுத போராட்டத்தின் முன் நிலவிய அறவழி போராட்ட காலகட்டத்திற்கு தமிழ் மக்கள் திரும்பிச்செல்லவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply